opposition parties
opposition parties

6 மாநிலங்களில் 7 தொகுதிகளில் இடைத்தேர்தல்: இந்தியா கூட்டணியின் பலம் வெளிப்படுமா?

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. அடுத்து வரும் 5 மாநிலத் தேர்தல் மற்றும் வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்க வியூகம் வகுத்துள்ளன.

நாட்டில் ஆறு மாநிலங்களில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடங்கியுள்ள இந்தியா கூட்டணியின் பலம் என்ன என்பது இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் வெளிப்பட்டுவிடும் என்று தெரிகிறது.

கோஷி (உ.பி.), துப்குரி (மேற்குவங்கம்), புதுப்பள்ளி (கேரளம்), பாகேஸ்வர் (உத்தரகண்ட்), தும்ரி (ஜார்க்கண்ட்) மற்றும் போக்ஸாநகர் மற்றும் தான்பூர் (திரிபுரா) ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் முடிவுகளில் எதிர்க்கட்சி கூட்டணியின் பலம் என்ன என்பது தெரிந்துவிடும்.

 இடைத்தேர்தல் முடிவுகள் செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன. துப்குரி, புதுப்பள்ளி, பாகஸேவர், தும்ரி மற்றும் போக்ஸாநகர் ஆகிய தொகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினர் மறைவால் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. கோஷி மற்றும் தான்பூரில் எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜிநாமா செய்ததை அடுத்து அங்கு தேர்தல் நடைபெறுகிறது.

உத்தர்பிரதேச மாநிலம் கோஷி தொகுதியில் சமாஜவாதி கட்சி எம்.எல்.ஏ.வான தாராசிங் செளஹான், பதவியை ராஜிநாமாச் செய்துவிட்டு பா.ஜ.க.வில் சேர்ந்தார். இத்தொகுதியில் பா.ஜ.க. சார்பில் செளஹான் போட்டியிடுகிறார். சமாஜவாதி சார்பில் சுதாகர் சிங் களத்தில் போட்டியிடுகிறார்.

திரிபுரா மாநிலம் தான்பூரில் பாஜகவின் பிரதிமா பெளமிக் மக்களவை எம்.பி. பதவியை தக்கவைத்துக் கொண்டு எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்ததால் ஏற்பட்ட காலியிடத்துக்கு தேர்தல் நடைபெறுகிறது. இங்கு பெளமிக்கின் சகோதரர் பிந்து தேவ்நாத் போட்டியிடுகிறார். மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கெளஷிக் சந்தா போட்டியிடுகிறார்.

கேரள மாநிலம் புதுப்பள்ளி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் போட்டியிடுகிறார். இங்கு ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஜெய்க் சி.தாமஸ் போட்டியிடுகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com