“கடந்த 5 நாட்களாக பீதியில் உறைந்திருந்தோம்” நாடு திரும்பிய மாணவர்கள் உருக்கம்!

Operation Ajay: Indians Return from Israel
Operation Ajay: Indians Return from Israel

ஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே சண்டை வலுத்துள்ள நிலையில், இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகத்துக்கு அழைத்துவர “ஆபரேஷன் அஜ்ய்” என்னும் திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது.

இஸ்ரேல் நாட்டில் சுமார் 18,000 இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இவர்களை பாதுகாப்பாக மீட்டு சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்துவர இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு “ஆபரேஷன் அஜய்” என பெயரிடப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக இஸ்ரேலிலிருந்து 212 இந்தியர்கள் தனி விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். அவர்கள் வெள்ளிக்கிழமை காலை புதுதில்லி விமானநிலையத்தில் வந்து இறங்கினர்.

தாயகம் திரும்பியவர்களை மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் புதுதில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றார்.

கடந்த அக். 7 ஆம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது அதிரடித் தாக்குதல் நடத்தியதை அடுத்து போர் சூழல் உருவானது. இதையடுத்து இஸ்ரேலுக்கான விமான சேவையை ஏர் இந்தியா நிறுத்திவைத்துள்ளது. இந்த நிலையில் அங்கு தவித்த இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம்  தாயகம் அழைத்துவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

“கடந்த சில நாட்களாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து வரும் மோதல் காரணமாக நாங்கள் பீதியில் உறைந்திருந்தோம். நல்ல வேளையாக இந்திய அரசு எங்களை அழைத்துவர சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது தூதரகம் மூலம் தெரியவந்ததும் நிம்மதி ஏற்பட்டது. எங்களை இந்தியா அழைத்துவந்த மத்திய அரசுக்கு நன்றி” என்று சுபம் குமார் என்ற மாணவர் தெரிவித்தார்.

இஸ்ரேலில் இருந்து இந்தியா வருவதற்கு இந்தியர்கள் இன்னும் டெல்அவிவ் விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர். அவர்களையும் அழைத்துவர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 7 ஆம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் அதிரடியாக இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர், எல்லைப் பகுதிக்குள் நுழைந்து அதிரடியாக துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் காசா நிலைகள் மீது குண்டுமழை பொழிந்தனர். இதில் அந்த நகரத்தில் பெரும்பாலான கட்டிடங்கள் தரைமட்டமாயின.

ஹமாஸ் தீவிரவாதிகளை முற்றிலுமாக ஒழிக்க இஸ்ரேல் உறுதிபூண்டுள்ளது. இதையடுத்து கடந்த 6 நாட்களாக தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா பகுதியில் மின்சாரம், குடிநீர் துண்டிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருள்களும் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் 3,000-த்தும் மேலானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் கொல்லப்பட்ட புகைப்படங்களை டெல்அவிவ் வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கனிடம் காட்டியுள்ளார். ஹமாஸ் தீவிரவாதிகளின் மனிதாபிமான மற்ற செயலை விளக்கியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com