
காவிரியிலிருந்து 24,000 கன அடி தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
இது தொடர்பாக கர்நாடக அரசு இதுவரை எவ்வளவு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது என்பது குறித்து செப்டம்பர் 8 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் கேட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற உள்ளதாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பதி தெரிவித்ததை அடுத்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடகம் திறந்துவிட்ட நீரின் அளவு குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் எங்களுக்கு எந்த நிபுணத்துவமும் இல்லை. அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடுவது குறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை கூடி முடிவு செய்ய உள்ளதாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எங்களிடம் தெரிவித்துள்ளார்.
தண்ணீரை திறந்துவிடுவதற்கான வழிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா இல்லையா என்பது குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அறிக்கை சமர்ப்பிப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும் என்று கருதுவதாக நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது.
நடவு செய்யப்பட்டுள்ள பயிர்களைக் காப்பாற்ற காவிரியிலிருந்து தினமும் 24,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை முற்றிலும் தவறானது என்று கர்நாடக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கர்நாடக அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், “தற்போதைய நீர் ஆண்டு சாதாரணமானதுதான். வறட்சி ஆண்டு அல்ல” என்று தமிழக அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது தவறான அனுமானத்தில் அடிப்படையிலானது என்றும் குறிப்பிட்டுள்ளது.