
திறன் வளர்ப்பு நிறுவனத்தில் பல கோடி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, இடைக்கால ஜாமீன் மற்றும் வழக்கமான ஜாமீன் கேட்டு இரண்டு மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு திறன் வளர்ப்பு நிறுவன ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ராஜமகேந்திரபுரத்தில் 14 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தன் மீதான புகார்கள் அனைத்தையும் மறுத்துள்ள சந்திரபாபு நாயுடு இடைக்கால ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். தமக்கு எதிரான புகாருக்கு பூர்வாங்க ஆதாரம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
நாங்கள் இரண்டுவிதமான மனுக்களை தாக்கல் செய்துள்ளோம். ஒன்று இடைக்கால ஜாமீன் மனு. மற்றொன்று வழக்கமான ஜாமீன் மனு. இந்த மனுக்கள் மீதான விசாரணை என்று நடக்கும் எனத் தெரியாது என்று அவரது வழக்குரைஞர் ஜி.சுப்பாராவ் தெரிவித்தார்.
தங்களது ஜாமீன் மனுக்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத்துறை பதில் மனு தாக்கல் செய்யாத நிலையில் விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற வழியில்லை. எனினும் குற்றப்புலனாய்வுத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அதற்கு இன்னும் பதில் தரவில்லை என்றார் வழக்குரைஞர் சுப்பாராவ்.
இந்த மனுக்கள் வியாழக்கிழமையே ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, திறன் வளர்ப்பு நிறுவனத்தில் நிதியை கையாடல் செய்ததான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். இதனால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில முதல்வராக இருந்தபோது மாநில திறன் வளர்ப்புக் கழகத்தில் ரூ.317 கோடிக்கு முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுகிறது. இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிப்பதற்காக தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த வாரம் வெள்ளிக்கி, நந்தியால் ஒரு நிகழ்ச்சியில் சந்திரபாபு கலந்துகொண்டபோது, நள்ளிரவில் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் அங்கு சென்று வாரண்ட் அளித்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் விஜயவாடா அழைத்துவரப்பட்டார்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிமன்ற உத்தரவின் பேரில் ராஜமகேந்திரபுரம் மத்திய சிறையில் 14 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.