உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது.
நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக கடந்த ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் -3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. 35 நாட்களாக புவி வட்டப்பாதை மற்றும் நிலவின் சுற்றுப்பாதைகளை நிறைவு செய்த விண்கலத்தில் இருந்து, வியாழன் பகல் ஒரு மணியளவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது. இந்நிலையில், De-Boosting முறையில் விக்ரம் லேண்டரின் சுற்றுவட்டப் பாதையின் உயரத்தை இஸ்ரோ மேலும் குறைத்துள்ளது.
இதனால், நிலவில் இருந்து குறைந்தபட்சம் 113 கிலோ மீட்டரில் இருந்து அதிகபட்சம் 157 கிலோ மீட்டர் தொலைவில் லேண்டர் சுற்றி வருகிறது. ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு லேண்டரின் தூரம் மேலும் குறைக்கப்பட்ட பிறகு நிலவில் எடுக்கப்பட்ட வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. விக்ரம் லேண்டரில் உள்ள லேண்டர் இமேஜர் கேமராவின் மூலம் நிலவின் மேற்பரப்பு படம் பிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிலவின் புதிய படங்களை வெளியிட்ட நிலையில் தற்போது வீடியோவையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் விக்ரம் லேண்டர் இன்று மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது. அதன் படி, இன்று வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதனை ஒட்டு மொத்த இந்திய மக்களும் கொண்டாடி வருகின்றனர். பல ஆண்டு போராட்டம் இன்று சாத்தியமானதையடுத்து இஸ்ரோ பெரும் மகிழ்ச்சியில் உள்ளது.