உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விதமான இஸ்ரோ விஞ்ஞானிகளின் கூட்டு உழைப்பின் விளைவாக நிலவின் தென்துருவ பகுதியில் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமான நேற்றைய தினம் கால்தடம் பதித்துள்ளது.
இந்நிலையில் சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநர் வீரமுத்துவேல் முன்பு ஒரு முறை பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரராகியுள்ளது. அதேபோல் சந்திரயான் 3 விண்கலம் சரியாக நிலவின் இறங்கிய பின்னர் இஸ்ரோ, சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுறை மற்றும் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பிநாராயணன் ஆகியோரி பெயர்கள் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து எக்ஸ் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ள சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் வீடியோவில் அவர் பேசியதாவது,''எல்லோருக்கும் வணக்கம், இந்த வாய்ப்பு கொடுத்த மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு நன்றி. இஸ்ரோவில் (indian space research organisation) நான் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறேன். என்னை பற்றி சொல்ல வேண்டும் என்றால், நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் விழுப்புரத்தில் தான். அரசு பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்தேன்.
பள்ளியில் நான் ஒரு ஆவரேஜ் மாணவன். அடுத்து எங்க படிக்கணும், என்ன படிக்கணும் என்பது குறித்து எந்த ஒரு ஐடியாவும் எனக்கு இல்லை.. அம்மா, அப்பா மற்றும் குடும்பத்தினர் யாரும் படித்தவர்கள் இல்லை. நண்பர்களுடன் சேர்ந்து டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினிரிங் சேர்ந்தேன்.
படிக்கும் போதே, என்ஜினிரியங் மேல் ஒரு ஈடுபாடு வந்தது. அதனால் என்னால், 90சதவீதம் மதிப்பெண் எடுக்க முடிந்தது. மெரிட்டில் ஸ்ரீசாய்ராம் என்ஜினிரியங் கல்லூரியில் பிஇ சேர்ந்தேன். எல்லா செமஸ்டரிடலும், முதல் அல்லது இரண்டாவது இடத்தில் வருவேன். இதில் வருவதற்கான எல்லா சமயத்திலும் படித்துக் கொண்டிருக்க மாட்டேன். படிக்கும் போது 100 சதவீதம் கவனத்துடன், நல்லா புரிஞ்சி படிக்கணும் என்று நினைப்பேன்.. அதுவே எனக்கு நல்ல பர்சன்டேஜ் மதிப்பெண்களை வாங்கி கொடுத்தது.
அதோடு பலனாக, நான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஒரு நல்ல காலேஜ்ல திருச்சியில் சேர்ந்தேன். பிஇ மாதிரியே, எம்இ யிலும் செமஸ்டர்களில் முதல் இரண்டு இடங்களை பிடிப்பேன். 9.1 சிஜிபிஏவோட படித்து முடிக்க முடிந்தது. கேம்பஸ் இண்டர்வியூ மூலமாக லட்சுமி மிசின் ஒர்க் கோவையில் சீனியர் என்ஜினியராக சேர்ந்தேன். அதில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே, எனக்கு விண்வெளி ஆராய்ச்சி மீது பெரிய ஈடுபாடு இருந்தது.
அப்போது தான் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் பெங்களூருவில் ஹெலிகாப்டர் டிவிசனில் டிசைன் என்ஜினியராக சேர்ந்தேன். கொஞ்ச காலத்திற்கு அப்புறம் என்னுடைய கனவான இஸ்ரோவில் சேருவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அங்கு முதலில் திட்ட என்ஜினியராகவும், அதன்பிறகு திட்டத்தின் மேனேஜராகவும் நிறைய அறிவியல் செயற்கைகோள் திட்டங்களில் பணியாற்றினேன்.
செவ்வாய் கிரகத்திக்கான ஆய்வு செயற்கை கோளிலும் பணியாற்றினேன். அதேநேரம் என்னுடைய ஆராயச்சியை விடவில்லை. பிஎச்டி ஐஐடி மெட்ராஸில் சேர்ந்தேன். vibration separation of electronics package satellite என்பதில் ஆராய்ச்சி செய்தேன். என்னுடைய ஆராய்ச்சி கட்டுரைகளை சர்வதேச ஆய்வு இதழ்களில் வெளியிட்டிருக்கிறேன். நிறைய ஆய்வு கூட்டங்களில் தெரிவித்திருக்கிறேன். பிஎச்டி பட்டத்தையும் வென்றேன்.
இஸ்ரோவின் முதல் NANO டீமை லீட் பண்றதுக்கான வாய்ப்பு கிடைத்தது. 3 நானோ செயற்கை கோள்களில் பணியாற்றி உள்ளேன். அசோசியேட் பிராஜெக்ட் இயக்குனராக சந்திரயான்2 வில் பணியாற்றினேன். இப்போது இஸ்ரோ என்னை சந்திரயான் 3 இல் திட்ட இயக்குனராக என்னை நியமித்துள்ளது. இது இஸ்ரோவின் மிகப்பெரிய திட்டம். ஓரு பெரிய டீமை நான் லீட் செய்து கொண்டிருக்கிறேன். நான் ஒரு சிம்பிள் ஆள். என்னால் இந்த அளவிற்கு வர முடியும் என்றால், எல்லாராலும் முடியும். வாய்ப்புகள் எல்லோருக்கும் இருக்கிறது. அதை எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பது நம் கையில் தான் இருக்கிறது.
என்னை பொறுத்தவரை சுயக்கட்டுப்பாடு, எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத 100 சதவீதம் ஈடுபாடு, கடின உழைப்பு, நம்முடைய தனித்தன்மை, இது நிச்சயம் வெற்றியை கொடுக்கும். கடின உழைப்புக்கு பலன் உண்டு. " இவ்வாறு கூறியுள்ளார்.