
சென்னையின் நிரந்தர சுற்றுலா தலமாக மாறுகிறது தீவுத்திடல் மைதானத்தில் ஒரு பகுதி. மேலும் இதற்காக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை என்றாலே பொழுதுபோக்கு பஞ்சம் இல்லாத நகரம் என்ற அளவில் பல்வேறு சுற்றுலா மையங்களை தனக்குள் கொண்டுள்ளது. மேலும் அனைத்து துறை சார்ந்த தலைமை அலுவலகங்களும் சென்னையில் இயங்கு வருவதால் சுற்றுலா மற்றும் இன்றி பல்வேறு விதமான பணிகளுக்காகவும் சென்னைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகம்.
அதிலும் பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் சென்னையில் உள்ள சுற்றுலா தலங்களில் கூடும் மக்களினுடைய எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உயர்ந்து கொண்டே வருகிறது.இந்த நிலையில் சென்னையின் முக்கிய மைதானமாக உள்ள தீவுத்திடலின் ஒரு பகுதியை நிரந்தர சுற்றுலாத்தலமாக மாற்ற தமிழ்நாடு சுற்றுலாத்துறை முடிவு செய்திருக்கிறது.
சென்னையின் முக்கிய மைதானமாக உள்ள தீவுத்திடலில் பல்வேறு வகையான அரசு நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மற்றும் கலை நிகழ்வுகள், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் நடைபெறும் இடமாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில் தீவுத்திடலின் 30 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த நிரந்தர சுற்றுலாத்தலத்தை அமைக்க தமிழ்நாடு சுற்றுலாத்துறை முடிவு செய்திருக்கிறது.
இதற்காக சிஎம்டிஏ நிர்வாகம், சென்னை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கிறது.மேலும் புதிதாக உருவாக உள்ள சுற்றுலா தலத்தில் திறந்தவெளி அரங்குகள், கண்காட்சி அரங்குகள், சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி, வாகன நிறுத்துமிடம், உணவகம், வணிக வளாகம் ஆகியவை அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
மேலும் தீவுத்திடலில் இருந்து சென்னை மற்றும் சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக போக்குவரத்து வசதிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்காக முதல் கட்டமாக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக சிஎம்டிஏ நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் மூலம் சுற்றுலாத் துறைக்கு வருவாய் இட்டுவதற்கான திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.