ராகுல்காந்தி எம்.பி. ஐரோப்பா பயணம்!

ராகுல்காந்தி எம்.பி. ஐரோப்பா பயணம்!
Published on

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி செவ்வாய்க்கிழமை ஒருவார கால சுற்றுப்பயணமாக ஐரோப்பா புறப்பட்டுச் சென்றார்.

ஐரோப்பிய நாடுகளில் ஒருவார காலம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராகுல்காந்தி, ஐரோப்பிய யூனியன் வழக்குரைர்கள், மாணவர்கள், ஐரோப்பா வாழ் இந்தியர்கள் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார்.

செப்டம்பர் 8 ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பல்கலைக்கழக மாணவர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடுகிறார். செப். 9 ஆம் தேதி பிரான்ஸ் தொழிற்சங்க கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் பிரான்ஸிலிருந்து நார்வே செல்லும் ராகுல்காந்தி, அங்கு ஆஸ்லோவில் நடைபெறும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் தனது சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு செப். 11 ஆம் தேதி புதுதில்லி திரும்புகிறார்.

ஜி-20 நாடுகள் அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமையேற்றுள்ளது. இதையொட்டி புதுதில்லியில் ஜி-20 நாடுகள் அமைப்பின் தலைவர்கள் கூட்டம் வருகிற 9 மற்றும் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அந்தந்த நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில் ஜீ-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு புதுதில்லியில் நடைபெறும் சமயத்தில் ராகுல் காந்தி வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. திட்டமிட்டே ராகுல் வெளிநாடு புறப்பட்டுச் சென்றுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கடந்த மே மாதம் ராகுல்காந்தி 10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுவந்தார்.  சான் பிரான்சிஸ்கோ, வாஷிங்டன் டி.சி. மற்றும் நியூயார்க் நகரங்களுக்குச் சென்ற ராகுல், அங்குள்ள இந்திய வம்சாவளியினர், முதலீட்டாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரை சந்தித்து உரையாடினார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ராகுல் லண்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே அவர் ஆற்றிய உரை பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்தியாவில் ஜனநாயகமே இல்லை. இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடக்கிறது. இது எல்லோருக்கும் தெரியும். நான் எதிர்க்கட்சித் தலைவர். ஆனால், எனக்கே நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு அனுமதியில்லை. பத்திரிகை சுதந்திரம் இல்லை. ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்று பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இதனிடையே பா.ஜ.க.வினர் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து விட்டதாக குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com