திருமணம் குறித்து மாணவிகள் கேள்வி? சுவாரஸ்யமான பதில் அளித்த ராகுல்காந்தி!

Rahul Gandhi with students
Rahul Gandhi with students

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் சென்றிருந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியிடம், ஜெயப்பூர் மகாராணி கல்லூரி மாணவர்கள், “நீங்கள் அழகாகவும் இருக்கிறீர்கள். புத்திசாலியாகவும் இருக்கிறீர்கள். ஆனால், ஏன் இன்றும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு ராகுல்காந்தி, “நான் திருமணம் செய்துகொள்ளாமல் கட்டை பிரம்மசாரியாக இருப்பதற்கு முக்கிய காரணம் எனது வேலைகளும் காங்கிரஸ் கட்சிப் பணிகளும்தான்” என்று கூறினார்.

ஜெய்ப்பூர் மகாராணி கல்லூரி மாணவிகளிடம் ராகுல்காந்தி நடத்திய உரையாடல் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு, சுதந்திர போராட்டத்தில் பெண்களின் பங்கு, பெண்களுக்கு நிதி சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மாணவிகளிடம் ராகுல் உரையாடினார். இவ்வளவுக்கும் இடையில் அவருக்கு பிடித்தமானது, பிடிக்காதது, இன்னும் திருமணம் செய்துகொள்ளாதது போன்ற பல கேள்விகளுக்கு ராகுல் பதிலளித்துள்ளார்.

“நீங்கள் ஸ்மார்ட்டாகவும், அழகாகவும் இருக்கிறீர்கள். திருமணம் செய்துகொள்வது குறித்து ஏன் நீங்கள் சிந்திக்கவில்லை” என்று 53 வயதாகும் ராகுல்காந்தியிடம் ஒரு மாணவி கேட்டார். அதற்கு ராகுல், “என்னுடைய சொந்த வேலைகள் மற்றும் காங்கிரஸ் கட்சிப் பணிகள்தான் அவற்றுக்கு முக்கிய காரணம்” என்று பதில் தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு பிடித்தமான உணவு எது என்று மற்றொரு மாணவி கேட்டார். அதற்கு ராகுல், பாகற்காய், பட்டாணி, கீரை தவிர மற்ற காய்கறிகள் எனக்கு பிடித்தமானது என்று தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு பிடித்தமான இடம் எது என்று மாணவிகள் கேட்டதற்கு, “இன்னும் நான் அந்த இடத்திற்கு செல்லவில்லை” என்று ராகுல் பதிலளித்துள்ளார். புதுப்புது இடங்களுக்குச் செல்வதில் எனக்கு விருப்பம் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் அழகாக இருப்பதன் ரகசியம் என்ன என்று மாணவிகள் கேட்டனர். அதற்கு ராகுல் காந்தி, நான் என் முகத்துக்கு கிரீம்கள் போட்டுக் கொள்வதில்லை. சோப்பும் பயன்படுத்துவதில்லை. குளிர்ந்த நீரில் முகம் கழுவுகிறேன் அவ்வளவுதான் என்று கூறியுள்ளார்.

பெண்கள் எந்த விதத்திலும் ஆண்களுக்கு குறைந்தவர்கள் அல்ல. அவர்களுக்கும் ஆண்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் வேண்டும். அதேபோல பெண்களுக்கு நிதிச் சுதந்திரம் வேண்டும். நிதியை கையாள்வது குறித்து பெண்களுக்கு சொல்லித்தரப்பட வேண்டும். பெண்கள் பணத்தை கையாளத் தெரிந்துகொண்டால் ஆண்களை நம்பி இருக்கவேண்டியதில்லை என்று ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் ராகுல் கூறினார்.

நீங்கள் அரசியல்வாதியாக இல்லாவிட்டால் என்னவாக இருந்திருப்பீர்கள் என்று மாணவர்கள் கேட்டனர். அதற்கு “நான் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். நான் ஆசிரியராகவோ அல்லது சமையற்காரராகவோ கூட இருந்திருக்கலாம்” என்று ராகுல் பதிலளித்துள்ளார்.

ஒருமுறை ராகுல் காந்தி விடுத்த அழைப்பின் பேரில், ஹரியாணாவில் இருந்த ஒரு குடும்பத்தினர் தில்லியில் அவரது வீட்டிற்கு விருந்தினராக வந்திருந்தனர். அப்போது சோனியாவை சந்தித்த அவர்கள், ராகுலுக்கு எப்போது திருமணம் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சோனியா காந்தி, “நீங்களே ஒரு நல்ல பெண்ணாக பார்த்து சொல்லுங்கள்” என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

மற்றொரு முறை எதிர்க்கட்சி கூட்டணியினர் சந்திப்பின் போது ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், “ ராகுல்ஜி ஏன் இப்படி தாடியுடன் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள். தாடியை எடுத்துவிட்டு விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள். பிரதமராக வர இருப்பவர் மனைவி இல்லாமல் இருக்க்க்கூடாது” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com