சென்னையில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள் முட்டியதில், ஒரே நாளில் 9 பேர் காயமடைந்தனர்.
சென்னை திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் நேற்று இரவு 11 மணி அளவில், திடீரென ஆக்ரோஷம் பிடித்தது போல மாறிய பசு ஒன்று, நடந்து சென்றவர்களை கொடூரமாக முட்டியத் தள்ளியது. அந்த வழியாக சென்று கொண்டிருந்த வாகனங்களில் இருந்தவர்களையும் துரத்தி துரத்தி முட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதில், ஒரு காவலர் உட்பட 6 பேர் காயமடைந்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பொதுமக்கள் உதவியுடன் காவல்துறையினர் மாட்டைப் பிடித்தனர். வெறிநாய் கடித்ததால் மாட்டுக்கும் வெறி பிடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, மாட்டின் உரிமையாளர் தேவராஜிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதே மாட்டிற்காக தேவராஜூக்கு ஏற்கனவே 3 முறை அபராதம் விதிக்கப்பட்டதாக கூறிய மாநகராட்சி அதிகாரிகள், தற்போதும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். பின்னர், திருவல்லிக்கேணி பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்ற போது, ஒருவர் மாட்டை விட மறுத்து அதிகாரிகளிடம் கெஞ்சினார்.
கடந்த மாதம் சென்னை அரும்பாக்கத்தில், பள்ளி சிறுமியை மாடு முட்டிய சம்பவத்தைத் தொடர்ந்து, மாநகராட்சி கடும் எச்சரிக்கை விடுத்தது. எனினும், சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவது குறையவில்லை எனவும், மாநகராட்சி தொடர் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.