
நடிகர் பாலையா பேரன் வீட்டின் ஸ்விம்மிங் பூலில் முதலை குட்டி ஒன்று இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி தங்கவேல். தொழில் அதிபரான இவர் மறைந்த பழம்பெரும் நடிகர் பாலையாவின் பேரன் ஆவார்.
பா.ஜ.க.வில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவராகவும் உள்ளார். இவர் மனைவி மற்றும் இரண்டரை வயது மகனுடன் பங்களா வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நீச்சல் குளம் உள்ளது. கடந்த சில நாட்களாக தாம்பரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீச்சல் குளத்தில் தண்ணீர் அசுத்தம் ஆனது.
இதையடுத்து பாலாஜி தங்கவேல் இன்று காலை நீச்சல் குளத்தில் இருந்த தண்ணீரை வெளியேற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது நீச்சல் குளத்திற்குள் ஒன்றரை அடி நீளம் உள்ள முதலைகுட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்பு அந்த முதலை குட்டியை லாவகமாக பிடித்து பிளாஸ்டிக் கூடையில் அடைத்து வைத்தார். இதுபற்றி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பூங்கா ஊழியர்கள் விரைந்து சென்று அந்த முதலைகுட்டியை மீட்டு பூங்காவிற்கு எடுத்துச் சென்றனர். தொடர்ந்து முதலை குட்டி எப்படி வந்தது என விசாரித்து வருகின்றனர்.
பறவைகள் உணவுக்காக முதலை குட்டிகளை தூக்கி செல்லும் போது இது போன்று கீழே போட்டு செல்வது வழக்கம் என கூறப்படுகிறது.