
சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் நிலவில் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கு அதில் ஏற்கனவே பிக்ஸ் செய்யப்பட்ட இடத்தை, AI தொழில்நுட்பம் தற்போது ஸ்கேன் செய்து தேடிக்கொண்டிருக்கிறது. அந்தத் தொழில்நுட்பத்தால் எடுக்கப்படும் புகைப்படங்கள் லேண்டெர் தரையிறங்கும் இடத்தில் பெரிய கற்களோ, பள்ளங்களோ இருக்கிறதா என்பதைக் கண்டறிய உதவும்.
சந்திரயான் மூன்றின் லேண்டர் இப்போது சந்திரனின் தென்துருவத்தில் பெரிய கற்கள் மற்றும் பள்ளங்கள் இல்லாத இடத்தைத் தேடுகிறது. பாதுகாப்பான இடம் துல்லியமாக கண்டுபிடிக்கப்பட்டதும் புதன்கிழமை மாலை 6:04 மணிக்கு நிச்சயம் நிலவின் தென் துருவப்பகுதியில் தரையிறங்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விக்ரம் லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் நிலவின் மேற்பரப்பில் உள்ள அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து தானாகவே அதற்கான இடத்தை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது. இந்தக் கேமராக்கள் நிலவில் ஏற்கனவே தரையிறங்க பிக்ஸ் செய்யப்பட்டிருக்கும் தளத்தை புகைப்படம் எடுத்து, தரவுகளை சேகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த கேமராக்களின் உதவியால் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க இருக்கும் அனைத்து சவால்களையும் தரையிறங்குவதற்கு முன்பே பார்க்க முடிகிறது.
விக்ரம் லேண்டரின் இந்த செயல்களை உலகமே தற்போது வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் இந்த விண்கலம் தரையிறங்கக்கூடிய பகுதி என்பது மிகவும் சவால் நிறைந்த இடமாகும். அந்த இடத்தைப் பற்றிய தகவல்கள் நம்மிடம் குறைவாகவே உள்ளது. அந்தப் பகுதியில் தரையிறங்கும்போது தான், சந்திரயான் 2 தோல்வியடைந்தது. தற்போது அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் 3 விண்கலத்தில் சந்திரயான் 2ல் செய்த பல தவறுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இதனால் தரையிறங்கும்போது விக்ரம் லேண்டரில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டாலும், அதில் புதிதாக மேம்படுத்தப்பட்டுள்ள விஷயங்களால் நிச்சயம் தரையிறங்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.