Tomato
Tomato

ஆந்திரம்: விலை வீழ்ச்சியால் தக்காளியை சாலையில் கொட்டிய விவசாயிகள்!

ந்திர மாநிலம், கர்நூல் மற்றும் நந்தியால் மாவட்டங்களில் மொத்தவிலை மார்க்கெட்டில் தக்காளிக்கான சந்தை விலை கிலோ ரூ.3 என வீழ்ச்சி அடைந்த்தால் விவசாயிகள் அதை விற்க முடியாமல் சாலையில் கொட்டிவிட்டுச் சென்றனர்.

ஒரு மாதத்திற்கு முன்பு தமிழகம், உத்தரப்பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தக்காளி கிலோ ரூ.200  வரை விலை வைத்து விற்கப்பட்டது. சாதாரணமாக கிலோ ரூ.20 அல்லது ரூ.30-க்கு விற்கப்படும் தக்காளி கிலோ ரூ.200-க்கு மேல் விலை வைத்து விற்கப்பட்டதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.

பருவநிலை மாற்றம் மற்றும் தக்காளிக்கு நல்ல விலை கிடைக்காததால் விவசாயிகள் வேறு பயிர்சாகுபடிக்கு மாறியதால் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த விவசாய குடும்பத்தினர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 45 நாட்களில் 40,000 பெட்டிகள் தக்காளியை விற்று ரூ.4 கோடி சம்பாதித்தனர். தக்காளி சாகுபடி செலவு ரூ. 1 கோடி போக லாபம் மட்டும் ரூ. 3 கோடி கிடைத்துள்ளது.

உ.பி.யில் தக்காளி வியாபாரி ஒருவர், தங்கத்துக்கு நிகராக கருதப்பட்ட தக்காளி கடையிலிருந்து திருட்டு போய்விடக்கூடாது என்பதற்காக கடைக்கு பாதுகாவலர்களை நியமித்ததும் செய்தியாக வெளிவந்தது. பஞ்சாபில் ஒரு செருப்பு கடைக்கார்ர், தமது கடையில் 1 ஜோடி ஷு வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என்றுகூட விளம்பரப்படுத்தியிருந்தார்.

இதனிடையே இப்போது தக்காளி உற்பத்தி அதிகரித்து விலை வீழ்ச்சி அடைந்ததால் ஆந்திர விவசாயிகள் தக்காளியை விற்கமுடியாமல் சாலையில் வீசிவிட்டுச் சென்றனர்.

நந்தியால் மாவட்டம், பையாபிலி மார்க்கெட்டில் வியாழக்கிழமை தக்காளி விலை கிலோ ரூ.3 என வீழ்ச்சி அடைந்தது. இதனால் கூலி மற்றும் போக்குவரத்து செலவைகூட மீட்கமுடியாத நிலையில் விவசாயிகள் தக்காளியை சாலையில் கொட்டினர்.

டோனி நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான டன்கள் தக்காளி சாலையில் கொட்டப்பட்டது. அதை ஆடு, மாடு போன்ற கால்நடைகள் தின்றுவிட்டுச் சென்றன. மழை மற்றும் உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்த்தாக சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com