செப். 23ல் ஒரே நாடு, ஒரே தேர்தல் குழுவின் முதல் கூட்டம்!

செப். 23ல் ஒரே நாடு, ஒரே தேர்தல்  குழுவின் முதல் கூட்டம்!

ரே தேசம், ஒரே தேர்தல் தொடர்பான கொள்கையை வகுப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் கூட்டம் இந்த மாதம் 23 ஆம் தேதி, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த தலைமையில் நடைபெற உள்ளது.

முன்னதாக மக்களவை, மாநில சட்டப்பேரவை, நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துக்களுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆய்வு செய்து பரிந்துரை செய்ய 8 பேர் அடங்கிய ஒரு உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளதுரி, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆஸாத், நிதிக்குழு முன்னாள் தலைவர் என்.கே.சிங் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

விரைவில் செயல்படத் தொடங்கி பரிந்துரைகளை அளிக்க இருக்கும் இந்த குழுவில் மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே, ஊழல் கண்காணிப்புத் துறை முன்னாள் ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் குழுவின் கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்வார். சட்ட விவகாரங்கள் துறை செயலர் நிதின் சந்திரா குழுவின் செயலாளராக இருப்பார்.

இந்த குழு அரசியலமைப்புச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு தேவைப்படும் இதர விதிகள், சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வது பற்றி ஆய்வு செய்து பரிந்துரை அளிக்கும்.அரசியலமைப்புச் சட்டத்திருந்தங்களுக்கு மாநிலங்கள் ஒப்புதல் பெறவேண்டுமா என்பதையும் இந்த குழு ஆய்வு செய்து பரிந்துரைக்கும்.

தொங்கு நாடாளுமன்றம், தொங்கு சட்டப்பேரவை, நம்பிக்கையில்லா தீர்மானம், கட்சித் தாவல், அல்லது ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் ஏற்படும் சிக்கல்கள் ஏற்பட்டால் அதற்கான தீர்வு என்ன என்பதையும் இந்த குழு ஆராய்து அறிக்கை சமர்ப்பிக்கும்.

இக்குழு அனைத்து நபர்கள் மற்றும் பிரதிநிதிகளின்  கருத்துக்களைக் கேட்டு அதன் பிறகு தனது முடிவுகளை பரிந்துரையாக அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com