பலவீனமான 161 தொகுதிகளை பலப்படுத்த பா.ஜ.க. புதிய திட்டம்
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 2019 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் இழந்தை இடங்களை மீட்க பா.ஜ.க. புதிய உத்திகளை வகுத்து வருகிறது. இந்த தொகுதிகளை வெல்லும் பொறுப்பு மாநிலத் தலைவர்களின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் பலவீனமான இந்த 161 தொகுதிகளில் மாநிலத் தலைவர்கள் அல்லது பிரபலங்களை நிறுத்துவது என்றும் பா.ஜ.க. முடிவு செய்துள்ளது.
கடந்த தேர்தலில் இழந்துவிட்ட 161 தொகுதிகளை மீட்பதற்கான குழுவில் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர்கள் சுநீல் பன்ஸால், வினோத் தாவ்டே, முன்னாள் பொதுச் செயலாளர் நரேஷ் பன்ஸால், கட்சியின் செய்தித் தொடர்பாளர், தேசிய செயலாளர் ஹரிஷ் துவிவேதி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இதற்கான தேர்தல் உத்தியை வகுக்கும் கூட்டம் பா.ஜ.க. தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
பா.ஜ.க.வுக்கு பலவீனமான தொகுதிகளாக கருதப்படும் 161 தொகுதிகளையும் பலப்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவை செயல்படுத்தப்பட்டு 15 நாட்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படும். வாக்குச்சாவடிகளை தரம் பிரிப்பது, வெற்றிக்கான வழிவகைகளை ஆராய்வது, அரசியல் ரீதியில் ஆய்வுகள் மேற்கொள்வது, சமூக ஊடகங்களை வலுப்படுத்துவது ஆகியவை இதில் அடங்கும்.
2019 மக்களவைத் தேர்தலில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 161 தொகுதிகளில் பா.ஜ.க. தோல்வி அடைந்தது. இந்த தொகுதிகளை பலப்படுத்தும் பொறுப்பு ஐந்து பேர் கொண்ட அரசியல் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகள், ஹிமாச்சலில் 2, ஹரியானாவில் 3, பஞ்சாபில் 9 மற்றும் ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதியையும் பலப்படுத்தும் பொறுப்பை நரேஷ் பன்ஸாலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேபோல இதர உறுப்பினர்களிடம் பலவீனமான தொகுதிகளை பலப்படுத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 12 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் உத்திகள் குறித்து கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.