
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கர் புதிய இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். இனி அவர், இந்திய தேர்தல் ஆணையத்தின் அடையாளச் சின்னமாக செயல்படுவார். அதாவது வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்.
இது தொடர்பாக தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் அனுப்சந்திர பாண்டே மற்றும் அருண் கோயல் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேர்தல் ஆணையத்துடன் மூன்று ஆண்டு ஒப்பந்த்த்தில் டெண்டுல்கர் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த கூட்டுமுயற்சி மூலம் வரவிருக்கும் தேர்தல்களில், குறிப்பாக 2024 பொதுத் தேர்தலில் இளம் வாக்காளர்களின் பங்கை அதிகரிக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இதன் மூலம் குடிமக்கள் குறிப்பாக இளைஞர்கள், நகர்ப்புற மக்கள் மற்றும் தேர்தல் நடைமுறைகளில் உள்ள இடைவெளியை குறைக்க முடியும் என தேர்தல் ஆணையம் கருதுகிறது.
இந்த நிகழ்வில் பேசிய மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரான டெண்டுல்கர், இந்தியா போன்ற துடிப்பான ஜனநாயக நாட்டில், தேசத்தை கட்டியெழுப்புவதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்று கூறினார்.கிரிக்கெட் போட்டியின்போது இந்திய அணியின் வெற்றிக்காக துடிக்கும் இதயம் போல், நமது ஜனநாயகத்தை முன்னெடுத்துச் செல்லும்போதும் துடிக்கும். அதற்கு எளிய வழி, சக்திவாய்ந்த வழி, தேர்தலின் போது நமது வாக்குகளை தவறாமல் செலுத்துவதுதான் என்றார் அவர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் பேசுக்கையில், சச்சின் டெண்டுல்கர் இந்தியா மட்டுமல்ல சர்வதேச அளவில் புகழ்பெற்றவர். கிரிக்கெட் விளையாட்டைத் தாண்டி அவர் திறமையானவர் என்றார். அர்ப்பணிப்பு, குழுப்பணி, இடைவிடாது வெற்றிக்கு பாடுபடுதல் ஆகியவை அவரது தொழில் முன்னேற்றத்துக்கு சான்றாகும் என்றும் அவர் கூறினார்.
அவர் தனது செல்வாக்கை பயன்படுத்துவதன் மூலம் வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் மேலும் கூறினார்.தொலைக்காட்சியில் உரையாடுவது, நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மற்றும் டிஜிட்டல் மூலம் பிரசாரம் செய்வதன் மூலம் டெண்டுல்கர், வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். வாக்களிப்பதன் அவசியத்தையும் மக்களிடம் எடுத்துரைக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதி தேசிய அடையாளமாக அங்கீகரிக்கப்பட்டார். இதேபோல 2019 பொதுத் தேர்தலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, பாலிவுட் நடிகர் ஆமீர்கான், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளங்களாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.