இந்தியாவில் நடைபெற்ற ஜி20 மாநாடு விதிவிலக்கானது: பிரேசில் அதிபர் பாராட்டு!
அடுத்த ஆண்டு ஜி 20 மாநாட்டை நடத்த உள்ள பிரேசில் இந்தியாவில் நடைபெற்று இருக்கக்கூடிய ஜி 20 மாநாட்டை பாராட்டி உள்ளது.
ஜி 20 உச்சி மாநாட்டிற்கு நடப்பாண்டு இந்தியா தலைமை பொறுப்பேற்று டெல்லியில் செப்டம்பர் 9, 10 ஆகிய இரு நாட்கள் மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறது. இந்த நிலையில் நேற்று இந்திய பிரதமர் மோடி பிரேசில் அதிபர் லூலா ட வில்வாவிடம் அடுத்த ஆண்டு ஜி 20 மாநாட்டை நடத்துவதற்கான அங்கீகாரத்தை வழங்கினார்.
இந்த நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பிரேசில் அதிபர் லூலா ட வில்வா தெரிவித்திருப்பது, இந்தியா ஜி20 மாநாட்டை நடத்தி இருக்கக்கூடிய வீதம் மிகச் சிறப்பானது. விதிவிலக்கானது. இதனால் அடுத்த ஆண்டு ஜி 20 மாநாட்டை நடத்த உள்ள பிரேசிலுக்கு பொறுப்பு கூடி உள்ளது. பிரேசில் மிகச் சிறப்பான வகையில் மாநாட்டை நடத்தும். அடுத்தாண்டு நடைபெறும் மாநாட்டில் சமத்துவ முக்கிய கருப்பொருளாக கொண்டு விவாதிக்கப்படும்.
உலகத்தில் தற்போது பாலியல், இனம், கல்வி, சுகாதாரம், வறுமை என்று பல்வேறு படிநிலைகளில் சமத்துவம் இன்மை காணப்படுகிறது. உலகம் முழுவதும் சமமாக கருதப்பட வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் ஒரு சேர வளர்ச்சி கொண்டு செல்வதை ஜி 20 நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்பதை பிரேசில் நடைபெறும் மாநாட்டின் மூலம் வலியுறுத்துவோம்.
உலகில் தற்போது 73 கோடி மக்கள் உணவில்லாமல் பசியோடு வாழ்கின்றனர். இந்த நிலைக்கு எதிராகவும், உலகில் போர் இல்லாத சூழலை உருவாக்கவும், உலகத்தினுடைய இயல்பு நிலையை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத வகையில் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்வது சம்பந்தமாகவும் பிரேசில் மாநாட்டில் விவாதிப்போம். பிரேசில் மாநாட்டில் அனைத்து நாட்டினுடைய தலைவர்களையும் பங்கேற்கச் செய்ய முயற்சி செய்வோம்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் எத்தனால் பயன்பாட்டை அதிகரிக்க முயற்சி எடுப்போம். பல்வேறு நாடுகளை உள்ளடக்கிய உலக இயற்கை எரிபொருள் கூட்டணி உருவாக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி. பிரேசில் இடம் இயற்கைக்கு பாதிப்பு இல்லாத 90 சதவீத இயற்கை சார்ந்த மின்சாரத்தை உருவாக்கும் தொழில்நுட்பம் இருக்கிறது.
மேலும் பிரேசிலில் நடைபெற இருக்கும் மாநாட்டில் சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் கொண்டு வரவும், உலக வங்கி நடைமுறையில் சீர்திருத்தம் கொண்டு வரவும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் சீர்திருத்தம் கொண்டு வரவும் நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார்.