பில்கிஸ் பானு வழக்கு:குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

BILKIS BANO
BILKIS BANO

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 11 கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் குஜராத் அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது பொதுவான கொள்கை முடிவா அல்லது ஒரு சில கைதிகளுக்கு மட்டுமே இது பொருந்துமா என்பது குறித்து விளக்கம் தருமாறு குஜராத் நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தின்போது பில்கிஸ் பானு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது மற்றும் 7 பேர் கொலைசெய்யப்பட்டது தொடர்பான வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், குஜராத் அரசின் புதிய கொள்கை காரணமாக தண்டனை பெற்ற 11 பேரும் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா, அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜுவிடம் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டார்.

சிறையில் இருக்கும் கைதிகளின் தண்டனைக் காலத்தை குறைப்பது என்பது ஒரு சிலருக்கு மட்டும்தானா. ஏன் மற்றவர்கள் விஷயத்திலும் இந்த முறையை பின்பற்றப்படவில்லை என்று நீதிபதி நாகரத்னா கேள்வி எழுப்பினார்.

1992 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கொள்கை முடிவின்படி கைதிகள் 11 பேரும் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்த்து பில்கிஸ் பானு, மார்க்சிஸ்ட் தலைவர் சுபாஷினி அலி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

குஜராத் அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண வாக்கு மூலத்தில், மும்பை போலீஸ் கண்காணிப்பாளர், மும்பை சிறப்பு குற்றப் புலனாய்வுத்துறை,  மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோர் இந்த 11 பேரின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும், உள்துறை அமைச்சகம் அவர்களை விடுவிக்க பரிந்துரைத்திருந்தது தெரியவந்தது.

ஆஸாதி கா அம்ரித் மகோத்சவ கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றும் மாநில அரசின் கொள்கை அறிவிப்பின்படியே அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாகவும் மாநில அரசு கூறியிருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com