முகக் கவசம் பயன்படுத்த சுகாதாரத் துறை அறிவுரை!
மழைக்காலங்களில் டெங்கு உள்ளிட்ட பல்வேறு வகையான காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பதை கட்டுப்படுத்த முககவசம் பயன்படுத்த பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.
மழைக்காலங்கள் என்றாலே பல்வேறு வகையான நோய்த்தொற்றுகள் ஏற்படுவது இயல்பான ஒன்று தான் என்றாலும், தற்போது வடகிழக்கு பருவமழை போதிய அளவு பொய்யாத நேரத்தில் கூட நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இப்படி தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
மேலும் கேரள மாநிலத்தில் நிபா வைரஸினுடைய தாக்கம் அதிகரித்துள்ளது. மெட்ராஸ் ஐ பரவலும் அதிகரித்துள்ளது. இது மட்டுமல்லாது திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் கடந்த மாத இறுதியில் மஞ்சக்காமாலை நோய் தொற்று அதிகரித்து காணப்பட்டன.
இதை அடுத்து சுகாதார துறையின் சார்பில் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தேங்கியுள்ள கழிவுநீர்களை அப்புறப்படுத்தும் பணி, சுகாதாரப் பணி மேலும் கொசு மருந்து அடிக்கும் பணிகள் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் தெரிவித்து இருப்பது, தமிழ்நாட்டில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவல் அதோடு சேர்த்து இன்ஃப்ளுயன்ஸா தொற்றும் அதிகரித்துள்ளது.
இதனால் மருத்துவமனை பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என்று அனைவரும் முகக் கவசங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்றும் மேலும் பொது இடங்களுக்கு சென்று வரக்கூடிய மக்கள் 3 அடுக்கு உள்ள முக கவசத்தை பயன்படுத்துவது நல்லது.
இது நோய் தொற்றை கட்டுப்படுத்தும், மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் முக கவச பயன்பாடு உலகம் முழுவதும் கட்டாயப்படுத்தப்பட்டது. இது நோய் தொற்று பரவலை பெருமளவில் கட்டுப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.