
இன்றைக்கு உலக நாடுகள் மத்தியில் கவனம்பெற்ற விஷயமாக மாறியுள்ளது இந்தியாவின் சந்திரயான் 3 விண்கல திட்டம். நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக கடந்த ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் -3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை 6: 04 மணியளவில் நிலவின் தென்துருவ பகுதியில் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
இஸ்ரோ விஞ்ஞானிகளின் 20 ஆண்டுகால உழைப்பு
இன்றைக்கு உலக நாடுகளில் கவனத்தை ஈர்த்துள்ள சந்திரயான் திட்டம் முதல் முறையாக கடந்த 2003 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார். இந்த திட்டம் தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு நனவாகப் போகிறது. இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் 20 ஆண்டுகள் தங்களின் கடும் உழைப்பை செலுத்தியுள்ளனர்.
இத்திட்டத்திற்கு சந்திரயான் எனப் பெயரிடக் காரணம், சமஸ்கிருதத்தில் சந்திரயான் என்றால் நிலவுக்களம் என அர்த்தம். மேலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான (இஸ்ரோ) உருவாவதற்கு அடித்தளமிட்டவரும், விண்வெளி விஞ்ஞானியுமான விக்ரம் சாராபாய் நினைவாக, சந்திரயான் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள லேண்டருக்கு 'விக்ரம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் ரோவருக்கு 'பிரக்னியான்' என்ற சமஸ்கிருத வார்த்தை பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு ஞானம் என அர்த்தமாகும்.
சந்திரயான் 3 திட்டமானது நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட மூன்றாவது மிஷனாகும். சந்திரயான் 1 நிலவின் நீள்வட்ட பாதையில் ஆர்பிட்டரை நிறுத்தி, அங்கிருந்து நிலவை ஆய்வு செய்வதற்காக அதனுடைய நீள்வட்ட பாதையில் நிறுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொண்டது. இதனையடுத்து கடந்த 2019ம் ஆண்டு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சந்திரயான் 2 மிஷன் விண்ணில் செலுத்தப்பட்டது.
சாதனைப்படைத்த சந்திரயான் 2 விண்கலம்
பூமியின் நீள் வட்டபாதையை வெற்றிகரமாக சுற்றிவந்த சந்திரயான் 2 விண்கலம், நிலவின் நீள்வட்ட பாதையும் வெற்றிகரமாக சுற்றிவந்தது. அப்போது, முதல் முறையாக நிலவின் தென் துருவ பகுதியில் பனிப்பாறைகளுக்கு இடையே நீர் இருப்பதை படம்பிடித்து நிலவில் நீர் இருப்பதற்கான ஆதாரத்தை முதல் முறையாக கண்டுப்பிடித்து உலக நாடுகளுக்கு அறிவித்தது. இதன்மூலம் நிலவில் நீர் இருப்பதை ஆதாரப்பூர்வமாக கண்டுக்பபிடித்த பெரும் இந்தியாவுக்கு கிடைத்தது.
ஆனால், நிலவின் தென்துருவ பகுதியில் சந்திரயான் 2 விண்கலம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விழுந்து நொருங்கியது. இதனால் நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்கும் இந்தியாவின் முயற்சியில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில், ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் -3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
சந்திரயான் 2 விண்கலத்தின் தோல்வியிலிருந்து பல பாடங்களைக் கற்றுக்கொண்ட இஸ்ரோ, சந்திரயான் 3 திட்டத்தில் பல மேம்படுத்தல்களை செய்து, எல்லா பிரச்சினைகளையும் எதிர்கொண்டு சாப்ட் லேண்டிங் செய்யும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து, LVM-3 ராக்கெட் மூலமாக வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
வெற்றி வெகு தொலைவில் இல்லை
சந்திரயான் மூன்று விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது. இதுவரை நிலவில் தரையிறங்கிய எல்லா லேண்டர்களும் நிலவின் மையப் பகுதியிலேயே தரையிறங்கியுள்ளது. ஆனால் சந்திரயான் 3 நிலவின் தென் துருவத்திற்கு மிக அருகில் தரையிறங்க உள்ளது. இது மட்டும் வெற்றிகரமாக முடிந்தால் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் முதல் விண்கலம் இதுவாகத்தான் இருக்கும்.
இதுவரை நிலவில் மொத்தம் மூன்று நாடுகள் மட்டுமே வெற்றிகரமாக சாப்ட் லேண்டிங் செய்த நிலையில், சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கினால், நிலவில் சாஃப்ட் லேண்டிங் செய்த நான்காவது நாடு என்ற பெருமை நமக்குக் கிடைக்கும். இந்த விண்கலத்திலிருந்து வெளியே வரும் ரோவர், நிலவில் 14 நாட்கள் வரை ஆய்வுப் பணிகளை செய்து பல புகைப்படங்களை எடுத்து இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.