மாணவர்களுக்காக களத்தில் இறங்கிப் போராடுவேன்: உதயநிதி ஸ்டாலின்!
‘நீட் தேர்வை ஒழிக்க மாணவர்களுக்காக களத்தில் இறங்கிப் போராடுவேன்’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு கலைஞர் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது, “திராவிட மாடல் அரசு கல்வியை அனைவருக்கும் கொண்டு செல்ல போராடி வருகிறது. ஆனால், பாசிச அரசு கல்வியைத் தடுக்க என்ன வழியோ அதை எல்லாம் செய்து வருகிறது. அதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான் நீட் தேர்வு. அரியலூர் அனிதா தொடங்கி, குரோம்பேட்டை ஜெகதீசன் வரை 26 பேரின் மரணத்துக்கு நீட் தேர்வு காரணமாக இருக்கிறது.
தமிழ்நாடு மருத்துவத் துறையில் உலக அளவில் புகழ் பெற்ற துறையாகவும், மிகச் சிறந்த மருத்துவர்களை தமிழ்நாடு உருவாக்கி இருக்கிறது. நீட் தேர்வு இல்லாமலேயே இந்த வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்திருக்கிறது.
நீட் தேர்வை தமிழ்நாட்டில் இருந்து நீக்குவதற்குத் தொடர்ந்து நானும் தமிழ்நாடு முதலமைச்சரும் முயற்சி செய்து வருகிறோம். அதற்காக போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், நீட் தேர்வை ஒழிக்க இங்கு ஒரு உதயநிதி பத்தாது, ஒவ்வொருவரும் உதயநிதியாக மாற வேண்டும். இளைஞர்களும், மாணவர்களும் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட முன்வர வேண்டும். நானும் தொடர்ந்து மாணவர்களுக்காக களத்தில் இறங்கிப் போராடுவேன். திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லியதைப் போல, நீட் தேர்வில் இருந்து விலக்கைக் கொண்டு வர தொடர்ந்து முயற்சி எடுப்போம்.
மும்பையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற, ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் கூட்டம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. ‘இந்தியா’ கூட்டணி வெல்லும். தமிழ்நாடு, பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெல்வதற்கு நாம் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும்” என்று பேசினார்.