இறந்ததாகச் சொல்லப்பட்ட வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் உயிருடன் இருப்பதாக இணையத்தில் பரபரப்பு வீடியோ ஒன்று பரவி வருகிறது. இதனால் ரஷ்யாவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர் வாக்னர் என்ற தனியார் ராணுவத்தின் தலைவர் பிரிகோஜின். இதனால் ரஷ்யாவில் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில நாட்களில் அவருடைய எதிர்ப்பை அவர் கைவிட்டார். அதன் பிறகு அதிபர் புதினை சந்தித்து விளக்கமும் கொடுத்தார். இருப்பினும் பலர், ‘பிரிகோஜின் விரைவில் கொலை செய்யப்படுவார்’ என்று கூறிவந்த நிலையில், அதற்கேற்றவாறு கடந்த வாரம் பிரிகோஜின் சென்ற விமானம் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. மொத்தமாக அவருடன் பயணித்த 10 பேரும் உயிரிழந்ததாகச் சொல்லப்பட்டது. அவர்கள் விமானம் கிளம்பியபோது எல்லாம் சரியாக இருந்த நிலையில், இறுதி 30 நொடிகளில் ஏதோ பிரச்னை ஏற்பட்டு விபத்தில் சிக்கிக்கொண்டனர்.
இதையடுத்து, இது விபத்தில்லை; திட்டமிட்டு இவர்களை கொலை செய்யப்பட்டுவிட்டனர் என பலரும் தெரிவித்து வந்தனர். இதற்கிடையே வாக்னர் குழுவின் தலைவர் வெளியிட்ட புதிய காணொளி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாகச் சொல்லப்பட்ட நிலையில், இந்த வீடியோவால் ரஷ்யாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த வீடியோவால் பல கேள்விகளும், சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன. வாக்னர் குழுவுக்கு சொந்தமான டெலிக்ராம் சேனலில் இந்த காணொளி முதலில் பகிரப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அவர் உயிருடன் இருக்கும்போது வெளியிட்ட வீடியோவில் இருப்பது போலவே, இதிலும் உடை அணிந்திருக்கிறார். எனவே, இந்த காணொளி உண்மை என்று சொல்கின்றனர். மொத்தம் 26 நொடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ, ஒரு வாகனத்தில் எடுக்கப்பட்டது போல தெரிகிறது. அதில் அவர் ரஷ்ய மொழியில் பேசுகிறார். "நான் தற்போது உயிருடன் இருக்கிறேனா? இல்லையா? அல்லது எப்படி இருக்கிறேன் என பலரும் விவாதித்து வருகின்றனர். நான் இப்போது ஆகஸ்ட் 2023 பிற்பகுதியில் ஆப்பிரிக்காவில் இருக்கிறேன். என்னை அழிக்க சிலர் திட்டமிடுகிறார்கள். எல்லாம் ஓகேதான். எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்" என அவர் அந்தக் காணொளியில் பேசுகிறார்.
தற்போது இந்தக் காணொளி ட்விட்டர் (X) தளத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஏற்கெனவே இவருடைய மரணம் குறித்த தகவல்களால் ரஷ்யாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இந்த வீடியோவால் தற்போது புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.