2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி சாத்தியமில்லை: ராகுல்!

Rahul
Rahul

“நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர், ‘இந்தியா’ எதிர்க்கட்சி கூட்டணியை ஆதரிக்கின்றனர். நாங்கள் ஒன்றுபட்டு மக்களவைத் தேர்தலை சந்திக்கும் நிலையில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு சாத்தியமில்லை” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

‘இந்தியா’ எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு 60 சதவீத மக்களின் ஆதரவு உள்ளது. நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படும் நிலையில், பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை. நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு திறமையாக செயல்படவே விரும்புகிறோம் என்று ராகுல் காந்தி எம்.பி. செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.

நாங்கள் மும்பை கூட்டத்தில் ஒன்றுபட்டு செயல்பட உறுதியேற்றுள்ளோம். எனவே, மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி எளிதாக இருக்காது. கூட்டுக்குழு அமைப்பதும், தொகுதிப் பங்கீடு விவகாரத்தை விரைந்து பேசி முடிப்பதும் முக்கியமானது என்று மேலும் கூறினார் ராகுல்.

இதனிடையே, மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள, ‘இந்தியா’ எதிர்க்கட்சி கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் 14 உறுப்பினர்கள் கொண்ட கூட்டுக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 19 உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் உத்தியை வகுக்கும் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது.

கூட்டுக்குழுவில் கே.சி.வேணுகோபால் (காங்கிரஸ்), சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்), டி.ஆர்.பாலு (திமுக), ஹேமந்த் சோரன் (ஜே.எம்.எம்.), சஞ்சய் ரெளத் (சிவசேனை - உத்தவ் பிரிவு), தேஜஸ்வினி யாதவ் (ஆர்.ஜே.டி.), அபிஷேக் பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்), ராகவ் சத்தா (ஆம் ஆத்மி), ஜாவித் அலிகான் (சமாஜ்வாதி), லல்லன் சிங் (ஐக்கிய ஜனதா தளம்), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), உமர் அப்துல்லா (தேசிய மாநாடு), மெஹ்பூபா முப்தி (பிடிபி) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தேர்தல் உத்திகளை வகுக்கும் குழுவில் குர்தீப் சிங் (காங்கிரஸ்), சஞ்சய் ஜா (ஐக்கிய ஜனதா தளம்), அனில் தேசாய் (சிவசேனை - உத்தவ் பிரிவு), பி.சி.சாக்கோ (தேசியவாத காங்கிரஸ்), சம்பை சோரன் (ஜே.எம்.எம்.), கிரன்மோய் நந்தா (சமாஜ்வாதி), சஞ்சய் சிங் (ஆம் ஆத்மி), அருண் குமார் (மார்க்சிஸ்ட்), வினோய் விஸ்வம் (இந்திய கம்யூனிஸ்ட்), ஓய்வு பெற்ற நீதிபதி ஹஸ்நைன் மசூதி, (தேசிய மாநாடு), ஷாஹித் சித்திக் (ஆர்.எல்.டி.), பிரேமசந்திரன் (ஆர்.எஸ்.பி.), ஜி.தேவராஜன் (ஏஐஎஃப்பி), ரவி ராய் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), திருமாவளவன் (விசிக), காதர் மொய்தீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), கேரள காங்கிரஸ் மணி பிரிவைச் சேர்ந்த ஜோஸ் கே.மணி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இது தவிர, எதிர்க்கட்சி கூட்டணி சமூக ஊடகங்களுக்கான செயல் குழுவையும் அறிவித்துள்ளது. அதில் சுப்ரியா ஸ்ரீநாத் (காங்கிரஸ்), சுமித் சர்மா (ஆர்.ஜே.டி.), ஆஷிஷ் யாதவ், ராஜீவ் நிகாம் (சமாஜ்வாதி), சத்தா (ஆம் ஆத்மி), அவிந்தானி (ஜே.எம்.எம்.), இல்டிஜா மெஹ்பூபா (பிடிபி), அருண்குமார் (சிபிஐ-எம்எல்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com