Lalu prasad yadav
Lalu prasad yadav

ஊழல் வழக்கில் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து சிபிஐ வழக்கு: லாலுவுக்கு சிக்கல்!

மாட்டுத்தீவன ஊழல் வழக்குகளில் பிகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்துச் செய்யக்கோரி சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதை அடுத்து லாலுவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த மனுவை வருகிற 25 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த ஊழல் தொடர்பான நான்கு வழக்குகளில் லாலுவுக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இதை எதிர்த்து சிபிஐ வழக்கு போட்டுள்ளது. இந்த வழக்குகளில் லாலு குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பாக லாலு மேல்முறையீடு செய்த வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

மாட்டுத்தீவன ஊழல் விவகாரம் தொடர்பாக லாலு மீது நான்கு வழக்குகள் உள்ளன. இதில் டோராண்டா கருவூல ஊழல் வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் லாலு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.(லாலு முதல்வராக இருந்தபோது கால்நடைகளுக்கான மாட்டுத்தீவனம் உள்ளிட்டவை வாங்குவதற்காக பல்வேறு அரசு கருவூலங்களிலிருந்து ரூ.950 கோடி சட்டவிரோதமாக பணம் எடுக்கப்பட்டது தொடர்பானதுதான் மாட்டுத்தீவன ஊழல் வழக்கு.)

தும்கா, தியோகர், சாய்பாஸா கருவூலங்களில் நடந்த ஊழல் தொடர்பாக 74 வயதான லாலுவுக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.இது தவிர நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை தொடர்பான வழக்கிலும் லாலு பிரசாத் சிக்கியுள்ளார். அதாவது லாலு, ரயில்வே அமைச்சராக இருந்தபோது குறைந்த விலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு ரயில்வே பணி வழங்கியதான வழக்கு இது.

இந்த வழக்கு தொடர்பாக லாலுவின் ரூ.6 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் லாலுவின் மனைவி ராப்ரி தேவி, மகள் மிஸா பாரதி, மற்றொரு மகள் ஹேமா யாதவின் கணவர் வினீத் யாதவ், ஹேமாயாதவின் மாமனார் சிவகுமார் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

லாலு, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக லாலு மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான வீடுகள், நிறுவனங்களில் தில்லி, பாட்னா உள்ளிட்ட 24 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் ரூ.1 கோடி பணம், வெளிநாட்டு கரன்சிகள், 1.5 கிலோ மதிப்புக்கு தங்க நகைகள் கைப்பற்றப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com