தனித்தே தேர்தலில் போட்டியிடுவோம்:மாயாவதி
இந்தியா எதிர்க்கட்சி கூட்டணி அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரும் வாய்ப்பே இல்லை என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான மாயாவதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் (டுவிட்டர் தளத்தில்) செய்தி வெளியிட்டுள்ள மாயாவதி, வரவிருக்கும் நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலோ அல்லது 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலோ ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சி ஆகிய எந்த கூட்டணியுடனும் நாங்கள் சேரப்போவதில்லை. தேர்தலில் தனித்தே போட்டியிட முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியாக இருந்தாலும் சரி, இந்தியா எதிர்க்கட்சி கூட்டணியாக இருந்தாலும் சரி இரண்டுமே ஏழைகளுக்கு எதிரானவை. வகுப்புவாத, முதலாளித்துவ கட்சிகளாகும்.
இந்த இரண்டு கூட்டணிகளின் கொள்கைகள் வேறு எங்கள் கட்சியின் கொள்கைகள் வேறு. எனவே அவற்றுடன் கூட்டணி சேர்வது அல்லது கூட்டாக சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். போலியான செய்திகளை பரப்புவதிலிருந்து விலகி நிற்குமாறு ஊடகங்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி, எதிரிகளின் சூழ்ச்சிக்கு அப்பாற்பட்டு சகோதரத்தின் அடிப்படையில் கோடிக்கணக்கான ஓரங்கட்டப்பட்ட நபர்களை ஒன்றிணைத்து அவர்களுடன் கூட்டணி அமைத்து 2007 போலவே வரவிருக்கும் தேர்தலில் போட்டியிம் என்றும் மாயாவதி கூறியுள்ளார்.
பொதுவாக இங்குள்ள அனைவரும் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைப்பதில் ஆர்வமாக உள்ளனர். ஆனால், அவர்கள் அப்படி சேரவில்லை என்றால் எதிர்க்கட்சிகள் அவர்களை பா.ஜ.க.வுடன் ரகசிய கூட்டு என்கின்றனர். அவர்களுடன் சேர்ந்தால் மதச்சார்பற்றவர்கள் என்கின்றனர் என்றார் மாயாவதி.
எங்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர், முதலில் காங்கிரஸ் கட்சியை புகழ்ந்து பேசினார். அதன் பின் அந்த நபர் வேறு ஒரு கட்சியில் சேர்ந்துவிட்டார். இப்படி இருந்தால் மக்கள் அவரை எப்படி நம்புவார்கள் என்று மாயாவதி கேள்வி எழுப்பினார்.
கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக மேற்கு உத்தரப்பிரதேச பகுதியைச் சேர்ந்த கட்சியின் மூத்த தலைவர் இம்பான் மசூத் என்பவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக மாயவதி கூறினார்.
முன்னாள் சுயேச்சை எம்.எல்.ஏ.வான மசூத் பலமுறை எச்சரித்தும் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அதன் காரணமாகவே அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் சஹரான்பூர் மாவட்ட தலைவர் ஜானேஸ்வர் பிரசாத் தெரிவித்தார்.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அஇஅதிமுக, லோக் ஜனசக்தி (ராம்விலாஸ் பாஸ்வான்), தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி.) மற்றும் சில கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியா எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.