கே.சி.ஆருக்கு பா.ஜ.க. கூட்டணியில் இடம் மறுக்கப்பட்டது ஏன் தெரியுமா? பிரதமர் மோடி வெளியிட்ட ரகசியம்!

கே.சி.ஆருக்கு பா.ஜ.க. கூட்டணியில் இடம் மறுக்கப்பட்டது ஏன் தெரியுமா? பிரதமர் மோடி வெளியிட்ட ரகசியம்!

தெலங்கானாவில் நிஜாமாபாதில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாரத் ராஷ்டிர சமிதி கட்சியையும், அதன் தலைவரும், மாநில முதல்வருமான சந்திரசேகர ராவையும் கடுமையாக தாக்கிப் பேசினார்.

பேரணி மற்றும் பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்த மக்களைப் பார்த்து பிரதமர் மோடி பேசுகையில், “ நான் இன்று உங்கள் அனைவருக்கும் இதுவரை சொல்லாத ஒரு ரகசியத்தை சொல்லப் போகிறேன்.

ஹைதரபாத் மாநகராட்சித் தேர்தலுக்குப் பிறகு முதல்வர் சந்திரசேகர ராவ், பா.ஜ.க. ஆதரவைக் கோரியதுடன் தேசிய ஜனநாயக கூட்டணியிலும் இணைய விரும்பினார்.  ஆனால், நான் அதற்கு மறுத்துவிட்டேன். இதற்கு காரணம் சந்திரசேகர ராவின் செயல்பாடுகள் பிடிக்காததால்தான்.

ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க. 48 இடங்களை வென்ற நேரத்தில் கே.சி.ஆர். பா.ஜ.க. ஆதரவை நாடினார். இந்த தேர்தலுக்கு முன்னதாக அவர், நான் தெலங்கானாவுக்கு வரும்போதெல்லாம் என்ன விமானநிலையத்துக்கு வந்து வரவேற்பார். ஆனால், திடீரென அதை நிறுத்திவிட்டார்.

கே.சி.ஆர். தில்லிக்கு வந்து என்னை நேரில் சந்தித்தார். உங்களது தலைமையில் நாடு முன்னேறி வருகிறது என்றும் கூறினார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரத் ராஷ்டிர சமிதி இணைய விரும்புவதாகவும் குறிப்பிட்டார். தம்மை ஆதரிக்குமாறும் கேட்டுக் கொண்டார். ஆனால், நான் அவரிடம், உங்களின் செயல்பாடுகள் எனக்குப் பிடிக்கவில்லை. எனவே நீங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர வாய்ப்பில்லை என்று முகத்தில் அடித்தார்போல் சொல்லிவிட்டேன் என்றார் பிரதமர் மோடி.

தெலங்கானா மக்களை பா.ஜ.க. ஏமாற்ற விரும்பவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பா.ஜ.க.தான் தலைமைவகிக்கிறது. எனவே கே.சி.ஆர். கட்சிக்கு அதில் இடமில்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டேன் என்றார் பிரதமர் மோடி.2020 ஆம் ஆண்டு டிசம்பரில் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க. 48 இடங்களை கைப்பற்றியபோதே தெலங்கானாவின் தலைவிதி மாறத் தொடங்கிவிட்டது.

பின்னர் கே.சி.ஆர். ஒருமுறை என்னை சந்தித்தபோது “மகன் கே.டி.ராமராவிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளப் போகிறேன். அதற்கு உங்கள் ஆசிர்வாதம் தேவை என்றார். ஆனால், நான் அவரிடம், உங்களுக்குப் பின் யார் என்பதை தெலங்கானா மக்கள் முடிவு செய்வார்கள்” என்று கூறிவிட்டேன்.

வாரிசை முடிவு செய்வதற்கு கே.சி.ஆர். என்ன முடிசூடா மன்னரா? என்று கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி, ஊழல் பேர்வழிகளுக்கு என்னுடன் அமருவதற்கு தகுதியில்லை என்றார். தெலங்கானாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பாரத் ராஷ்டிர சமிதியின் ஊழல்கள் வெளிச்சத்துக்கு வரும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இதனிடையே நிஜாமாபாதில் நடைபெற்ற கூட்டத்தில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவை கடுமையாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளதற்கு பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவர்களில் ஒருவரான கே.டி.ராமராவ் பதிலடி கொடுத்துள்ளார்.

பா.ஜ.க. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த முக்கிய அரசியல் கட்சிகளை இழந்துவிட்டது. இப்போது அவர்களுடன் இருப்பது சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித் துறையினர்தான். பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றவர்கள் எத்தனை தவறுகள் செய்தாலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்றார் முதல்வரின் மகனான கே.டி.ராமராவ்.

சிவசேனை, ஐக்கிய ஜனதாதளம், தெலுங்குதேசம், சிரோமணி அகாலிதளம் ஆகிய கட்சிகள் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகி விட்டதை கே.டி.ராமராவ் சுட்டிக்காட்டினார். பல முக்கிய கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணயிலிருந்து விலகிய நிலையில் அந்த கூட்டணியில் சேருவதற்கு நாங்கள் என்ன முட்டாள்களா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com