INDIA OPPOSITION PARTIES
INDIA OPPOSITION PARTIES

“இந்தியா” கூட்டணியின் சின்னம் மும்பை கூட்டத்தில் வெளியிடப்படும்: சஞ்சய் ரெளத்

2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்கொள்ளும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான “இந்தியா” வின் சின்னம் அடுத்த வாரம் மும்பையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் வெளியிடப்படும் என்று சிவசேனை உத்தவ் தாக்கரே பிரிவின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரெளத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, எம்.பி.க்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதி மும்பை புறநகர் பகுதியில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் நடைபெறும் மூன்றாவது கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.

இந்த இரண்டுநாள் கூட்டத்தில் புதிய அரசியல்கட்சிகள் குறிப்பாக வடகிழக்கு மாநில அரசியல் கட்சிகள் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் ரெளத் கூறினார்.இந்த கூட்டத்துக்கு சிவசேனை உத்தவ் பிரிவு தலைவர் உத்தவ் தாக்கரே ஏற்பாடு செய்துள்ளதாகவும் ரெளத் மேலும் கூறினார்.

இந்த கூட்டத்தில் “இந்தியா” எதிர்க்கட்சி கூட்டணியின் சின்னம் வெளியிடப்படும். மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான உத்திகள் குறித்து விவாதிக்கப்படும். 140 கோடி மக்களையும் சென்றடையை முயற்சித்து வருகிறோம். இந்த சின்னம் நாட்டையும், அதன் ஒற்றுமையையும் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என்றும் ரெளத் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா மற்றும் ராகுல் காந்தி தவிர பா.ஜ.க. அல்லாத ஆறு மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடுவது மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாகவும், 38 சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் நிகழ்வை செய்தியாக்குவதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகள் கூட்டணியின் முதல் கூட்டம், பிகார் மாநிலம் பாட்னாவில், மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவருமான நிதிஷ்குமார் தலைமையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது.

இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூலை மாதத்தின் பிற்பகுதியில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு “இந்தியா” என பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. (இந்தியா- இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி என்பதன் சுருக்கமாகும்.).

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com