இஸ்ரேல்:இந்தியர்களை மீட்க “ஆபரேஷன் அஜய்”

அமைச்சர் ஜெயசங்கர்
அமைச்சர் ஜெயசங்கர்

ஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே சண்டை வலுத்துள்ள நிலையில், இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகத்துக்கு அழைத்துவர “ஆபரேஷன் அஜ்ய்” என்னும் திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது.

இஸ்ரேல் நாட்டில் சுமார் 18,000 இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இவர்களை பாதுகாப்பாக மீட்டு சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்துவர இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு “ஆபரேஷன் அஜய்” என பெயரிடப்பட்டுள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், எக்ஸ் தளத்தில் செய்தி பதிவிட்டுள்ளார்.

முதல் தொகுதியாக இந்தியா வருவதற்காக பெயர் பதிவு செய்துள்ளவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் வியாழக்கிழமை தனி விமானம் மூலம் இந்தியா அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளது.

முதல் விமானத்தில் இந்தியா வரும் பெயர் பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. அவை மின்னஞ்சல் மூலம் இந்தியாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அடுத்தடுத்த விமானங்களில் மற்றவர்களும் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று அந்த செய்தி மேலும் கூறுகிறது.

இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பத்திரமாக, பாதுகாப்பாக மீட்கப்பட்டு தாய்நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள். அதன்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.இஸ்ரேலில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 7,000 பேர் இருப்பதாகவும் அவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறும் கேரள முதல்வர் பினராய் விஜயன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இஸ்ரேலில் தமிழகத்தைச் சேர்ந்த 84 பேர் சிக்கித் தவிப்பதாகவும் அவர்களில் சிலர் மேற்படிப்புக்காக சென்றவர்கள் என்றும் சிலர் தொழில் நிமித்தமாகவும் மற்றவர்கள் சுற்றுலாவும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக அரசு கூறியுள்ளது.

இந்த நிலையில் கடந்த நடிகை நுஸ்ரத் பாருச்சா, ஹைஃபா சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக இஸ்ரேல் சென்றார். இஸ்ரேஸ்-ஹமாஸ் தாக்குதல் காரணமாக அவர் செய்வதறியாமல் சிக்கித் தவித்தார். எனினும் அவர் பத்திரமாக மும்பை வந்து சேர்ந்த்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், இதற்கென அவசர நடவடிக்கைகளுக்கான அரசை நியமித்துள்ளது.

கடந்த 5 நாட்களுக்கு முன்பாக ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் எல்லைப் பகுதி மீது அதிரடியாக ஏவுகணை தாக்குதலை நடத்தினர். மேலும் எல்லைப் பகுதிக்குள் அதிரடியாக நுழைந்து கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் 700-க்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களும் அடங்குவர்.

ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் ஹமாஸ் நிலைகள் மீது ஏவுகணை தாக்கல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேலின் குண்டுமழையால் காசா நகர கட்டிடங்கள் தரைமட்டமாயின. அங்கு வசித்து வந்த ஆயிரக்கணக்கான சிவிலியன்கள் கொல்லப்பட்டனர். இதுவரை 3000 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காசா எல்லைப் பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகளை ஒழிக்கும் முயற்சியில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது. அந்தப் பகுதியில் குடிநீர், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதல் காரணமாக எங்கும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. காசா பகுதியைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் என 20 லட்சம் பேர் பள்ளிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதனிடையே 150-க்கும் மேலானவர்களை ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக சிறைப்பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இவர்களில் அமெரிக்கா, ஜெர்மன், மெக்ஸிகோ, தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தினால் பிணைக் கைதிகளை கொன்றுவிடுவோம் என்று ஹமாஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும், லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள தீவிரவாதிகளும் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து இஸ்ரேல் பலமுனை தாக்குதலை சமாளிக்க வேண்டியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com