
வாடகை ஆட்டோக்களுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் தனியார் ஆன்லைன் செயலிகளுக்கு மாற்றாக அரசு ஆன்லைன் செயலியை உருவாக்க முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வகையான தனியார் ஆன்லைன் கைபேசி செயலிகள் வாடகை வாகனங்களை முன்பதிவு செய்யும் வசதியை வழங்கி வருகின்றன. ஆரம்ப காலகட்டத்தில் ஓட்டுநர்களுக்கு இதில் கூடுதல் வருமானம் கிடைத்த நிலையில் பிறகு நிறுவனங்கள் கூடுதல் கமிஷன் தொகையை எடுத்துக் கொள்வதால் ஓட்டுநர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அரசே செயலியை தொடங்கி ஓட்டுனர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தது.இந்த நிலையில் போக்குவரத்து ஆணையரக வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தி, ஓட்டுநர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு நிர்ணயித்த ஆட்டோ கட்டணத்தின் அடிப்படையில் ஆன்லைன் வழியாக பயணிகள் முன்பதிவு செய்து வாடகை ஆட்டோக்களை பயன்படுத்த வழி செய்யும் வகையில் அரசின் சார்பில் புதிய செயலி உருவாக்கப்பட்டு வருகிறது.
அந்த செயலியை நடப்பாண்டு டிசம்பர் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சி நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.மக்கள் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து பயன்படுத்துவதன் மூலம் கட்டணம் குறைவாக வசூலிக்கப்படுவதால் பெரும்பான்மையான மக்கள் ஆன்லைன் வழியாக வாடகை வாகனங்களை பதிவு செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
இதை கருத்தில் கொண்டு அரசு சார்பில் புதிய பிரத்தியேக செயலியை உருவாக்கி அரசு நிர்ணயித்த ஆட்டோ கட்டணத்தின் அடிப்படையில் பயணிகள் முன்பதிவு செய்யும் வகையில் செயலி உருவாக்கப்பட்டு வருகிறது.மேலும் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஆட்டோ வாடகை கட்டணம் என்பது 2013 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 1.8 கிலோ மீட்டர் தொலைவிற்கு 25 ரூபாயும், அதன்பிறகு ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 12 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது.
மேலும் காத்திருப்பு கட்டணமாக ஐந்து நிமிடத்திற்கு 3.50 ரூபாயும், இரவு நேரங்களில் அதே கட்டணங்கள் இரட்டிப்பாக வசூலிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை நிர்ணயித்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. மேலும் தற்போது பெட்ரோல் டீசல் பொருட்களின் மீதான விலை பெருமளவில் உயர்ந்திருக்கிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கட்டணத்தை கூடுதல் செய்வதற்கான முயற்சியும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்காக ஆட்டோ நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை 1.70 லட்சம் விவரங்கள் திரட்டப்பட்டு கைப்பேசி வழியாக பயன்படுத்தும் ஆன்லைன் செயலி உருவாக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர். அரசே புதிய செயலியை உருவாக்கும் பட்சத்தில் தொழிலாளர்களும் அதிக வருமானம் ஈட்டுவேர், பயணிகளும் பயனடைவர்.