தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது மதச்சார்பற்ற ஜனதளம் கட்சி!

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது மதச்சார்பற்ற ஜனதளம் கட்சி!

முன்னாள் பிரதமர் தேவெகெளட தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி (ஜே.டி.எஸ்), பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் வெள்ளிக்கிழமை முறைப்படி இணைந்தது.

முன்னதாக கர்நாடக முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் குமாரசாமி, பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தில்லியில் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து இந்த இணைப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது கோவா முதல்வர் பிரமோத் சாவந்தும் உடன் இருந்தார்.

இது தொடர்பாக ஹெச்.டி. குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், பா.ஜ.க. கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதாதளம் இணைந்த தகவலை தெரிவித்தார். நாங்கள் நாட்டின் அரசியல் தொடர்பான பல்வேறு விஷயங்களைப் பேசினோம். நாங்கள் எந்த ஒரு கோரிக்கையும் முன்வைக்கவில்லை என்றார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி இணைந்ததை வரவேற்பதாக பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜே.டி.எஸ். சேர்ந்துள்ளது கூட்டணிக்கு மேலும் பலம் சேர்க்கும். புதிய வலுவான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் நோக்கத்துக்கு இது வலுசேர்ப்பதாக இருக்கும் என்றும் நட்டா கூறினார்.

கடந்த சில மாதங்களாகவே கர்நாடக அரசியலில் மக்களவைத் தேர்தல் விரைவில் நடக்க இருப்பதையொட்டி மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி, பா.ஜ.க. கூட்டணியில் சேரலாம் என்று பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில் மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவெகெளட, அவரது மகன் குமாரசாமி இருவரும் கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இருவரையும் சந்தித்துப் பேசினர். இதையடுத்து இணைப்பு உறுதியானது.

2019 மக்களவைத் தேர்தலின்போது மதச்சார்பற்ற ஜனதாதளம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டது. எனினும் கர்நாடகத்தில் பா.ஜ.க. மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 25 தொகுதிகளை கைப்பற்றியது. மாண்டியா தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் பா.ஜ.க. ஆதரவுடன் வெற்றிபெற்றார்.

கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி வைத்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி 19 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இது அக்கட்சிக்கு மோசமான தோல்வியாகும்.

தில்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்துக்கு குமாரசாமி கட்சி அழைக்கப்படவில்லை. ஜுலை மாதம் பெங்களூருவில் இந்தியா எதிர்க்கட்சி கூட்டணிக் கூட்டம் நடைபெற்ற போதும் அக்கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

2006 ஆம் ஆண்டு கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி, பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைத்தது. ஆனால், கூட்டணி 20 மாதங்கள்தான் நீடித்தது. 2018 ஆம் ஆண்டு மே மாதம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து குமாரசாமி முதல்வரானார். ஆனால், அந்த கூட்டணி 14 மாதங்களில் முறிந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com