
தில்லியில் நடைபெறும் ஜி-20 தலைவர்கள் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க் அதிபர் ஜோ பைடன், செப்டம்பர் 7 ஆம் தேதி இந்தியா வருகிறார். 10 ஆம் தேதி வரை அவர் தங்குகிறார். இந்த மாநாட்டில் தூய்மையான ஆற்றல் பரிமாற்றம், காலநிலை மாற்றம். உக்ரைன் போரின் தாக்கங்கள் மற்றும் உலக வங்கி உள்ளிட்ட பல்முனை வளர்ச்சி வங்கிகள் திறன் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிரதமர் நரேந்திர மோடி, ஜி20 தலைமையையும் அதிபர் பைடன் பாராட்டி பேசுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தூய்மையான எரிசக்தி மாற்றம், காலநிலை மாற்றத்தை சமாளித்தல், உக்ரைன் போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதார, சமூக தாக்கங்கள், வங்கிகளின் முன்னேற்றம் உள்ளிட்ட சர்வதேச பிரச்னைகளை கூட்டு முயற்சியுடன் சமாளிப்பது குறித்து அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் விவாதிப்பார்கள் என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
அதிபர் பைடன் புதுதில்லியில் இருக்கும்போது ஜி20 நாடுகள் அமைப்பை சிறப்பாக தலைமையேற்று நடத்துவதற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கிறார். பொருளாதார கூட்டுறவுக்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டையும் அவர் உறுதிப்படுத்துவார். 2026 ஆம் ஆண்டு ஜி20 அமைப்புக்கு அமெரிக்கா தலைமையேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடநத் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி இந்தோனேசியாவிடமிருந்து இந்தியா ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றது.இந்த மாதம் 9 மற்றும் 10 ஆகிய இரு தேதிகளில் ஜி20 அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் உச்சி மாநாடு புதுதில்லியில் நடைபெற உள்ளது. இதில் உலகநாடுகளின் தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.
இந்த உச்சி மாநாட்டை முன்னிட்டு தில்லியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செப். 8 முதல் 10 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதனிடையே அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஜாகர்த்தா மற்றும் இந்தோனேசியாவில் நடைபெற உள்ள ஆசியான் மாநாடு மற்றும் கிழக்காசிய மாநாட்டில் பங்கேற்கவிருக்கிறார்.
பொதுவான பாதுகாப்பு, காலநிலை நெருக்கடி, கடல் பாதுகாப்பு, நிலையான பொருளாதார வளர்ச்சி மற்றும் சர்வதேச விதிகளை அமல்படுத்துதல் குறித்து கமலா ஹாரிஸ் முக்கியமாக விவாதிப்பார் என்று தெரிகிறது.