தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்க எதிர்ப்பு.. கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு!

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா

காவிரியிலிருந்து குறுவை சாகுபடிக்காக  தமிழகத்திற்கு விநாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் உள்ள விவசாய சங்கங்கள், கன்னட அமைப்புகள் வெள்ளிக்கிழமை பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

தில்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் 87-வது கூட்டத்தில், ‘‘த‌மிழகத்தின் குறுவை சாகுபடிக்காக கர்நாடக அரசு அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் விநாடிக்கு 3000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதாவது செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்துக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும்'' என குழு உத்தரவிட்டுள்ளது.

தமிழத்துக்கு காவிரி நீர் வழங்குவதற்கு கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை கண்டித்து விவசாய சங்கத்தினர் மாண்டியா, மைசூரு, பெங்களூரு ஆகிய இடங்களில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் முதல்வர் சித்தராமையா, ‘‘காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட இருப்பதாக  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கன்னட சாலுவாளிக அமைப்பின் தலைவர் வட்டாள் நாகராஜ், ‘‘தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக அரசை கண்டித்தும் வெள்ளிக்கிழமை (நாளை) கர்நாடகா முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு, கர்நாடக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, கர்நாடக திரைப்பட வர்த்தக கூட்டமைப்பு, தனியார் வாகன உரிமையாளர்கள் சங்கம் உட்பட 150க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர‌ கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் வெள்ளிக்கிழமை தில்லியில் நடைபெறுகிறது. இதில் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இதில் தமிழக அரசு தரப்பில், குறுவை சாகுபடிக்கு கூடுதலாக நீரை திறந்துவிடுமாறு கோரப்படும் என தெரிகிறது.

ஏற்கெனவே காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள், கன்னட ஆதரவு அமைப்புகள் மற்றும் அரசியல் அமைப்புகள் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் பந்த் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

காவிரி மேலாண்மைக் கழகம் தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு தினசரி விநாடிக்கு 5,000 கன அடிவீதம் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டிருந்ததை அடுத்து இந்த பந்த் நடத்தப்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் போதிய மழை இல்லாததாலும், அணைகளில் குறைந்த அளவே தண்ணீர் இருப்பதாலும், விவசாயிகள் பாசனத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுவதாகவும், இதையடுத்து தமிழகத்துக்கு தண்ணீர் தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் விவசாயிகள் மற்றும் இதர கன்னட அமைப்புகள் இந்த பந்த் நடத்த அழைப்புவிடுத்திருந்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com