காவிரி நீர் விவகாரம்: பிரதமர் மோடியை சந்திக்கிறது கர்நாடக அனைத்துக் கட்சி குழு!
தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்குவது குறித்த சர்ச்சைக்கு முடிவுகாணவும், நிலுவையில் உள்ள திட்டங்களைச் செயல்படுத்தும் நோக்கிலும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அனைத்து கட்சி குழு முடிவு செய்துள்ளது.
எனினும் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. பிரிக்ஸ் மாநாட்டுக்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர், நாடு திரும்பியதும் பிரதமர் மோடியை சந்திக்க குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிடுவது குறித்து விவாதிப்பதற்காக கர்நாடக அரசு, அனைத்து கட்சி கூட்டத்துக்கு புதன்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. அப்போது நதிநீர் பங்கீட்டில் தண்ணீர் இல்லாத சமயத்தில் புதிய உத்தியை கடைப்பிடிப்பது, மேக்கேதாட்டு அணைத் திட்டத்தைச் செயல்படுத்துவது, மழை குறைவான காலத்தில் எழும் பிரச்னைகளை சமாளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
கர்நாடகத்தில் கடந்த ஆண்டைவிட 42 சதவீதம் மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதில் சர்ச்சை எழுந்துள்ளது.
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பான வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள நிலையில் சட்டப்போராட்டத்தை திறமையாக கையாள்வது குறித்து எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை அரசு கோரியுள்ளது.
வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணைக்கு வரும்போது உண்மைநிலையை எடுத்துரைக்கவும், தங்கள் தரப்பு வாதத்தை ஆர்வத்துடன் எடுத்துரைக்கவும், தமிழகத்துக்கு தண்ணீர் தரமுடியாத சூழலை நீதிமன்றத்தில் முன்வைக்கவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தண்ணீர் பற்றாக்குறையை கையாள்வதில் உள்ள மெத்தனப் போக்கு குறித்து அரசு, முன்பு அதிகாரிகளை எச்சரித்திருந்ததாக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை ஒருபேட்டியில் கூறியிருந்தார். உறுதியான தகவல்கள் மற்றும் உண்மை நிலையை புள்ளி விவரங்களுடன் எடுத்துக்கூறி உச்சநீதிமன்றத்தில் வாதாட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
மேலும் காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்றும் இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு எதிர்க்கட்சியான பா.ஜ.க. துணை நிற்கும் என்றும் பொம்மை கூறியுள்ளார்.