
"சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா" என வடிவேலுவின் பிரபலமான காமெடி ஒன்று உள்ளது. ஆனால் ஐரோப்பாவில் உள்ள மான்டெக்னெக்ரோ என்ற நாட்டில் கடந்த 26 நாட்களாக சிலர் எதுவுமே செய்யாமல் சும்மா இருக்கிறார்கள். அதாவது உலகின் மிகப்பெரிய சோம்பேறி யார் என்பதற்கான போட்டி அங்கு நடந்துவருகிறது. இந்த போட்டியில் இன்னும் 7 பேர் களத்தில் எஞ்சியுள்ளனர்.
மான்டெக்னெக்ரோ நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான முறையில் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு உலகிலேயே யார் மிகப்பெரிய சோம்பேறி என்ற பட்டத்திற்கான போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் தொடங்கிய இந்தப் போட்டி தற்போது 26 நாட்களைக் கடந்து நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்பவர்கள் எந்த வேலையும் செய்யாமல் 24 மணி நேரமும் பெட்டிலேயே படுத்தபடி இருக்க வேண்டும். அவர்கள் நடக்கவோ, எழுந்து உட்காரவோ எதற்கும் அனுமதி கிடையாது.
ஒருவர் அதிகபட்சம் எத்தனை நாட்கள் வரை சும்மா இருக்க முடியும் என்பதே இந்தப் போட்டியின் மையக்கருவாகும். அதிக நேரம் யார் படுத்துக் கொண்டிருக்கிறாரோ அவர்தான் போட்டியின் வெற்றியாளர். தொடக்கத்தில் இந்தப் போட்டியில் மொத்தம் 21 பேர் கலந்து கொண்டனர். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல ஒவ்வொருவராக போட்டியிலிருந்து விலகிய நிலையில், தற்போது 7 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர்.
இந்தப் போட்டியில் வெல்பவர்களுக்கு சுமார் 88 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும். போட்டியின் விதிப்படி அவர்கள் எப்போதுமே படுத்துக் கொண்டிருக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் படுத்துக்கொண்டு மட்டுமே செய்ய வேண்டும். அவர்கள் மொபைல் போனை பயன்படுத்த அனுமதி உண்டு. இதுகுறித்து கடந்த ஆண்டு நடந்த இதே போட்டியில் வெற்றிபெற்று, இந்த ஆண்டும் களத்தில் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் கூறுகையில், " இந்த ஆண்டு போட்டி சற்று கடுமையாகவே இருக்கிறது. நாங்கள் அனைவருமே ஜாலியாக இருக்கிறோம். உடல்நலப் பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை. எங்களை ஒரு குழந்தை போல அனைவரும் பார்த்துக் கொள்கின்றனர். நாங்கள் எந்த வேலையும் செய்யாமல் சும்மா தூங்கினால் போதும்" என அவர் கூறினார்.
இந்தப் போட்டி கடந்த 12 ஆண்டுகளாக மான்டெக்னெக்ரோ நாட்டில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந் நாட்டைச் சேர்ந்தவர்களை அனைவரும் சோம்பேறி என்று கூறுவதால், அதை கிண்டலடிக்கும் விதமாக இவர்கள் இந்தப் போட்டியை தொடங்கினார்கள். ஆனால் இந்த போட்டி இப்போது மிகவும் சீரியசான போட்டியாக நடந்து வருகிறது.