சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து காங்கிரஸ் தற்போது பேசுவது ஏன்? அகிலேஷ் யாதவ் கேள்வி!

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

ட்சியில் இருந்தபோது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத காங்கிரஸ் கட்சி இப்போது அதைப் பற்றி பேசுவது ஏன் என்று, சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி மீது சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடும் தாக்குதல் நடத்தினார்.

மக்களவையில் அனைத்து அரசியல் கட்சிகளும் சாதிவாரி கணக்கெடு நடத்தக் கோரியபோது சுதந்திரம் பெற்றதிலிருந்து ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி அதை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மத்தியப்பிரதேச மாநிலம், சாத்னாவில் அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது இந்த கேள்வியை அவர் எழுப்பினார்.காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கியை இழந்துவிட்டது. அதனாலேயே இப்போது சாதிவாரி கணக்கெடுப்பை கையிலெடுத்துள்ளது என்றும் அகிலேஷ் கூறினார்.

இதனிடையே சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கண்டுகொள்ளவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றஞ்சாட்டினார். மேலும், இந்தியா எதிர்க்கட்சி கூட்டணியும் சாதி வாரி கணக்கெடுப்பு கோரிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. சட்டப்படி மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

பிகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களும் இந்த கோரிக்கையை எழுப்பியுள்ளன.

இந்தியா எதிர்க்கட்சி கூட்டணி நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அதே நேரத்தில் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் சமூகத்தில் பிளவு ஏற்பட்டுவிடும் என்று கூறிவருகிறது.

இதனிடையே சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசு, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அதுபற்றி கருத்து எதுவும் தெரிவிக்காமல் பிரதமர் மோடி மெளனமாக இருப்பது ஏன் என்று ராகுல்காந்தி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நான் பிரதமர் மோடியிடம் பலமுறை வலியுறுத்தியும் அவர் அதை கண்டுகொள்ளவில்லை. காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல்காந்தி கூறினார்.

மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ்சிங் செளஹான் அமைச்சரவையில் 53 அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். இவர்களில் ஒருவர் மட்டுமே ஓ.பி.சி. வகுப்பைச் சேர்ந்தவர். அங்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி.) 50 சதவீத்துக்கு மேல் இருந்தும் அவர்களை அரசு புறக்கணித்து வருகிறது என்றார் ராகுல் காந்தி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com