ம.பி.யில் தேர்தல் டிக்கெட் மறுப்பு: 32 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி!

Madhya Pradesh CM Sivaraj singh Chawhan
Madhya Pradesh CM Sivaraj singh Chawhan

த்தியப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளுக்கு வரும் நவம்பர் மாதம் 17 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளன.

இந்த நிலையில் காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட முக்கிய அரசியல்கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. பா.ஜ.க மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 228 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆனால், தற்போது  எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் 32 பேருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட டிக்கெட் மறுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தேர்தலில் போட்டியிட டிக்கெட் மறுக்கப்பட்டதை அடுத்து முன்னாள் அமைச்சர் ருஸ்தம் சிங், பா.ஜ.க.விலிருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில்சேர்ந்துள்ளார்.

78 வயதான ருஸ்தம் சிங் மூன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி. கட்சிக்காக உழைத்தவர்களுக்கு டிக்கெட் தராமல், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த தேர்தலில் டிக்கெட் தரப்பட்டுள்ளது. இதையடுத்தே பா.ஜ.க.விலிருந்து ராஜிநாமா செய்துள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார். குர்ஜார் தலைவரான அவருக்கு சம்பல் பகுதியில் நல்ல செல்வாக்கு உள்ளது.

பா.ஜ.க.வில் மூன்று அமைச்சர்கள் உள்பட 32 எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட் மறுக்கப்பட்டுள்ளது. குணா மற்றும் விதிஷா தொகுதிகளுக்கு மட்டும் இன்னமும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

இதேபோல முன்னாள் உள்துறை அமைச்சர் உமாசங்கர் குப்தாவுக்கும் பா.ஜ.க.வில் தேர்தல் டிக்கெட் மறுக்கப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதய அறுவைச்சிகிச்சை செய்துகொண்டதை காரணம் காட்டி டிக்கெட் மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. குப்தாவுக்கு டிக்கெட் மறுக்கப்பட்டுள்ளதை அடுத்து மூன்று மாநகராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேலான அவரது ஆதரவாளர்களும் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

கடந்த 2018 தேர்தலில் குப்தா, போபால் தென்மேற்கு தொகுதியில் போட்டியிட்டு 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் டிக்கெட் எதிர்பார்த்த அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அந்த தொகுதியில் பகவன்தாஸ் சப்னானி போட்டியிடுவார் என்று பா.ஜ.க. அறிவித்துள்ளது.

பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் நந்தகுமார் செளஹானின் மகன் ஹர்ஷவர்த்தனுக்கும் கண்ட்வா தொகுதியில் போட்டியிட டிக்கெட் மறுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஞானேஸ்வர் பாடீல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் டிக்கெட் மறுக்கப்பட்டதால் 20-க்கும் மேலான தொகுதிகளில் பா.ஜ.க.வினர் போர்க்கொடி உயர்த்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று பெயர் குறிப்பிட விரும்பாத பா.ஜ.க. தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை மத்திய அமைச்சரும் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பூபேந்திர யாதவ், ஜபல்பூர் வந்திருந்தபோது அவரை ஆர்ப்பாட்டக்கார்ர்கள் சிலர் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. ஜபல்பூர் வடக்கு தொகுதியில் அகிலேஷ் பாண்டே வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு தொண்டர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியபோது இந்த சம்பவம் நடந்தது.

காங்கிரஸ் கட்சியில் தேர்தல் டிக்கெட் மறுக்கப்பட்டதால் அஜாப் சிங் குஷ்வாஹா எம்.எல்.ஏ., முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திர சிங் ராஜுகேடி, நஸீர் இஸ்லாம், கேதார் கன்ஸா ஆகியோரை பின்பற்றி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடலாம் எனத் தெரியவந்துள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. முரளி மோர்வால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கமல்நாத் வீடு முன் ஆர்ப்பாட்டம் நடத்தியற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இவருக்கும் தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. அதிருப்தியாளர்களை சமாளிக்க காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டு கட்சிகளும் தவறிவிட்டதாக அரசியல் பார்வையாளர் தினேஷ்குப்தா தெரிவித்தார். முன்பு வேட்பாளர் தேர்வு பற்றி ஆய்வு செய்யப்பட்டு மத்திய தலைமைக்கு பட்டியல் அனுப்பிவைக்கப்படும். அதன் பேரில் கட்சி மேலிடம் இறுதி முடிவு எடுக்கும். ஆனால், இப்போது ஆய்வு எல்லாம் நடத்துவதில்லை. உள்ளூர் தலைவர்களே வேட்பாளர்கள் பட்டியலை முடிவு செய்வதால் அதிருப்தி கோஷ்டிகள் தலைதூக்குகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு குறிப்பிட்ட தொகுதியில் போட்டியிட பலரும் போட்டி போடுவதால்தான் பிரச்னை உருவாகிறது. எனினும் இவை சுமுகமாக தீர்த்து வைக்கப்படும் என்றார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுவதேஷ் சர்மா. ஆனால், பா.ஜ.க.வில் அதிருப்தி கோஷ்டிகள் இருப்பதை அக்கட்சியின் தலைவர் அகர்வால் மறுத்தார். எதாவது பிரச்னை என்றால் கட்சித் தலைமை பார்த்துக்கொள்ளும். காங்கிரஸ் கட்சியைப் போல் அல்லாமல், பா.ஜ.க. ஒழுங்குக்கு கட்டுப்பட்டவர்கள். யார் போட்டியிட்டாலும் கட்சியின் வெற்றிதான் எங்களுக்கு முக்கியம் என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com