மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள் என்ன செய்யவேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!
மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் என்ன செய்யவேண்டும் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கியுள்ளார். மேலும் தமிழ்நாடு அரசின் சார்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நேற்று அண்ணா பிறந்தநாள் அன்று மகளிருக்கான 1000 ரூபாய் வழங்கும் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் ஒரு கோடியே 60 லட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்த நிலையில் பல மனுக்கள் நிராகரிக்கப்பட்டு ஒரு கோடிக்கும் அதிகமானவர்களுக்கு தற்போது உரிமை தொகை வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது, தமிழ்நாட்டில் தகுதியுடைய மகளிருக்கு கட்டாயம் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சருடைய நோக்கமும் அதுவே. தகுதி இருந்தும் விடுபட்டிருக்கக் கூடிய சில நபர்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள இ சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.
இதனுடைய மேல்முறையீட்டு நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட அதிகாரியான வட்டாட்சியரிடம் விளக்கம் கேட்க வேண்டும். அதன் பேரில் மீண்டும் விசாரிக்கப்பட்டு தகுதியுடைய நபர்களுக்கு உடனடியாக உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மாவட்ட வாரியாக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்படும். மேலும் கட்டுப்பாட்டு மையங்களும் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாடு அரசின் சார்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வரும் செப்டம்பர் 18ஆம் தேதி அன்று குறுஞ்செய்தி வரும், குறுஞ்செய்தி வந்ததற்கு பிறகு நிராகரிக்கப்பட்டவர்களுக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதற்குள் அருகில் உள்ள இ சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அல்லது மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும், அதையடுத்து டேட்டா மேனேஜரால் மீண்டும் சரிபார்க்கப்படும்.
குறிப்பாக ஆய்வுக்கு வரும் பொழுது வீட்டில் ஆள் இல்லை என்று இருந்தால், அவர்களுக்கு வீட்டிற்கு சென்று மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு மகளிர் உதவித்தொகை கிடைக்க வழி செய்யப்படும். இப்படி தகுதியுடைய காரணங்கள் இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.