
மணிப்பூர் சட்டப்பேரவையின் ஒரு நாள் கூட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஓக்ரம் இப்போபி சிங் தலைமையிலான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், மணிப்பூர் நிலவரம் பற்றி விவாதிக்க ஒரு நாள் போதாது. எனவே கூட்டத்தை ஐந்துநாள் வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். குக்கி இனத்தைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்களும் அவைக்கு வரவில்லை.
காலை 11 மணி அளவில் பேரவைக் கூட்டம் தொடங்கியது. முதலில் கடந்த மே 3 ஆம் தேதி குக்கி மற்றும் மெய்டீஸ் இனமக்களிடையே நடந்த இனமோதலில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
முதல்வர் என். பீரேன் சிங் உரையாற்றுகையில் வன்முறையில் இறந்தவர்களுக்கு மிகுந்த துயரத்துடன் இரங்கல் தெரிவிக்கிறோம். அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண்பதுதான் சிறந்த வழியாகும். மாநிலத்தில் அமைதியும் வகுப்பு நல்லிணக்கமும் உருவாக வேண்டும்.
சாதி, வகுப்பு, மொழி, மதம் கடந்து மணிப்பூர் மக்களின் நல்வாழ்வுக்கு சேவை செய்ய இந்த அவை ஏகமனதாக உறுதியேற்கிறது. மாநிலத்தில் அமைதி திரும்ப முன்னுரிமை அளிக்கப்படும். மக்களிடம் நிலவும் வேறுபாடுகளைக் களைய இந்த அரசு பாடுபடும் என்று தெரிவித்தார்.
சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கும், இஸ்ரோ குழுவில் மணிப்பூரை சேர்ந்த விஞ்ஞானி என்.ரகு சிங் இடம்பெற்றதற்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அவையில் கோஷமிடத் தொடங்கினர். மணிப்பூர் நிலைமை பற்றி விவாதிக்க ஒருநாள் போதாது. ஐந்து நாள் அவையை நடத்த வேண்டும் என்று கோரினர்.
பேரவைத் தலைவர் சத்தியவிரத சிங், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை இருக்கையில் அமருமாறு வலியுறுத்தினார். ஆனால், அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை 30 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவையை தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் அவையை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.
மாநில அரசு கடந்த மாதம் ஆகஸ்ட 21 ஆம் தேதி பேரவைக்கூட்டம் நடத்த பரிந்துரைத்திருந்தது. எனினும் பின்னர் 28 ஆம் தேதி கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆளுநரிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த வாரம் முதல்வர் அலுவலகம் பேரவைக் கூட்டம் ஆகஸ்ட் 29 இல் நடைபெறும் என அறிவித்தது.
இதற்கு முன் பேரவைக்கூட்டம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. சட்டவிதிகள்படி பேரவைக்கூட்டம் 6 மாதத்துக்கு ஒரு முறை நடைபெறவேண்டும்.
முன்னதாக பழங்குடியினர் ஒற்றுமைக்கான குழு மற்றும் பழங்குடியினர் தலைவர்கள் அமைப்பும், பேரவைக்கூட்டத்தை நடந்த இது உகந்த நேரம் அல்ல. இதில் குக்கி எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவித்திருந்தது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லாத நிலையில் பேரவைக் கூட்டத்தை கூட்டுவது சரியல்ல என்றும் கூறியிருந்தது.
கடந்த சனிக்கிழமை முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான ஓக்ராம் இபோபி சிங், பேரவைக் கூட்டம் நடத்துவது ஒரு கண்துடைப்புதான். அவையை கூட்டுவதற்கு இது சரியான தருணமல்ல என்று கூறியிருந்தார்.
மணிப்பூரில் கடந்த மே 3 ஆம் தேதி நடந்த இனமோதல் மற்றும் வன்முறைக்கு 160-க்கும் மேலானவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.