File image
File image

இமாச்சல மாநிலம் குல்லுவில் திடீர் நிலச்சரிவு!

Published on

இமாச்சல் மாநிலம், குல்லு மாவட்டத்தில் புதன்கிழமை ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் பல வீடுகள் இடிந்து விழுந்தன. பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என தெரியவந்துள்ளது. அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழும் காட்சி வெளியாகியுள்ளது.

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே இந்திய வானிலை ஆராய்ச்சி மையம், அடுத்த இரண்டு நாட்களுக்கு ஹிமாச்சல மாநிலத்தில் பலத்த முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்று “ரெட் அலர்ட்” (எச்சரிக்கை)  விடுத்துள்ளது.

பேரழிவை ஏற்படுத்திய நிலச்சரிவில் அடுக்குமாடி வர்த்தக கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமான காட்சி குல்லுவிலிருந்து வெளியிடப்பட்ட படக்காட்சிகள்  சித்தரிக்கின்றன. எனினும் ஆபத்து இருப்பதை முன்கூட்டியே அறிந்து நிர்வாகத்தினர் அங்கிருந்தவர்களை இரண்டு நாட்களுக்கு முன்பே வெளியேற்றியது என்று மாநில முதல்வர் சுக்விந்தர் சுகு, எக்ஸ் தளம் (டுவிட்டர் தளம்) மூலம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அரசு நிர்வாகம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக உயிர்ச்சேதம் ஏதும் இல்லை என்று மாநில போலீஸ் அதிகாரி சஞ்சய் குண்டு தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் இடைவிடாத மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது. மழையின் சீற்றத்தால் ஏராளமான மக்கள் சொல்லொணா துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். மழை, நிலச்சரிவு காரணமாக குல்லு- மண்டி தேசிய நெடுஞ்சாலை பாதிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. மாற்று வழியான பாண்டோ பகுதி சாலையும் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது என்று குல்லு போலீஸ் அதிகாரி சாக்ஷி வர்மா தெரிவித்தார்.

இடைவிடாத மழை, நிலச்சரிவு, மேகவெடிப்பு, திடீர் வெள்ளத்தால் மாநிலமே நிலைகுலைந்து போயுள்ளது. மழைக்காலத்தில் ஏறக்குறைய ரூ.8,000 கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவிக்கிறது.

மழையால், 2.022 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 9,615 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. 113 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழைக்கு இதுவரை 224 பேர் பலியாகியுள்ளனர், மழை தொடர்பான விபத்துக்களில் 117 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

logo
Kalki Online
kalkionline.com