மக்கள் கவனம் என் பக்கம் திரும்பிவிடும் என்பதால் பாஜகவினர் யாத்திரைக்கு அழைக்கவில்லை: உமாபாரதி

உமாபாரதி
உமாபாரதி

பா.ஜ.க.வின் ஜன ஆசிர்வாத் யாத்திரையில் நான் பங்கேற்றால் மக்கள் கவனம் என்பக்கம் திரும்பிவிடும் என்பதால் பயந்து போய் பா.ஜ.க. தலைவர்கள் எனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான உமாபாரதி தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க.வின் ஜன ஆசீர்வாத் யாத்திரையை கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா போபலில் தொடங்கிவைத்தார். எனினும் இந்த கூட்டத்திற்கு பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான உமாபாரதிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு பா.ஜ.க. மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க ஜோதிர் ஆதித்ய சிந்தியா காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், 2003 ஆம் ஆண்டில் ம.பி.யில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க நான் உதவினேன் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்கிறார் உமாபாரதி.

ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை மருமகன் போல் நேசித்து வந்தேன்.எனக்கு யாத்திரை தொடக்க விழாவுக்கு அழைப்பு இல்லாததால் செல்லவில்லை. குறைந்தபட்சம் எனக்கு அழைப்பு விடுத்திருக்கலாம். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதற்கு நான் தகுதியானவள்தான் என்றார் உமாபாரதி. எப்படியிருந்தாலும் நான் பா.ஜ.க.வுக்காக தேர்தல் பிரசாரம் செய்வேன். வாக்குகள் சேகரிப்பேன் என்றார் உமாபாரதி. பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானிக்கு மிகவும் நெருக்கமானவரான உமாபாரதி. கட்சியின் தீவிர பிரசாரகர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாத்திரைக்கு உமாபாரதியை அழைக்காதது குறித்து பா.ஜ.க. விளக்கம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், பா.ஜ.க.வின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், ராமர் ஆலய இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவரும், பா.ஜ.க.வை புகழ் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர்களில் ஒருவருமான உமாபாரதி வேண்டுமென்றே ஓரங்கட்டப்பட்டுவிட்டதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூறியுள்ளது.

பா.ஜ.க. அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களை இழிவுபடுத்தி வருவதாக காங்கிரஸ் தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி, மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி போன்றோரை அக்கட்சி ஓரங்கட்டிவிட்டதை அவர் சுட்டிக்காட்டினார். மூத்தவர்களை மதிக்காதவர்களை கடவுள் மன்னிக்க மாட்டார் என்றும் அவர் மேலும் கூறினார்.

2003 ஆம் ஆண்டில் மத்தியப்பிரதேசத்தில் திக்விஜய் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவு கட்டியவர் உமாபாரதி. அந்த தேர்தலில் பா.ஜ.க. மூன்றில் இரண்டு பங்கு பலம் பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக அவர் கட்சியிலிருந்து 2005 ஆம் ஆண்டு நீக்கப்பட்டார். பின்னர் மீண்டும் 2011 இல் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

2013 ஆம் ஆண்டு கட்சியைப் பலப்படுத்தவும் வழிநடத்தவும் நியமிக்கப்பட்ட 13 துணைத் தலைவர்களில் உமாபாரதியும் ஒருவர். எனினும் நரேந்திர மோடிக்குத்தான் கட்சியில் அதிக செல்வாக்கு உள்ளது. அவரைத்தான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா கூறிய யோசனையை புறந்தள்ளியவர் உமாபாரதி.

பிரபலமானவர் என்ற ஒரே காரணத்துக்காக மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்கமுடியாது. மக்களிடையே பிரபலமாக இல்லாவிட்டாலும் மோடியைவிட திறமையானவர்கள் பலர் கட்சியில் இருக்கிறார்கள் என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு உமாபாரதி பேட்டியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com