தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை:திமுக அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை!
நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமென்றும், 10 ரூபாய் கூடுதல் மானியம் வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு, குறு தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் பசுந்தேயிலையை நம்பியே உள்ளது. தொடர்ந்து பசுந்தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்து வருவதால், சுமார் 85 ஆயிரம் சிறு, குறு தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக சிறு , குறு தேயிலைத் தோட்ட விவசாயிகள் உற்பத்தி செய்யும் ஒரு கிலோ தேயிலைக்கு 2 ரூபாய் மானியமாக வழங்கி சிறு, குறு தேயிலைத் தோட்ட விவசாயிகளின் வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. மேலும், நலிந்து வந்த தேயிலைத் தொழிலுக்கு புத்துயிர் ஊட்ட 2001-2006 ஆண்டுவரை தமிழ் நாட்டில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் 100 கிராம் தேயிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்யும் திட்டத்தைத் துவக்கி, தேயிலை தொழிலுக்கு உயிரூட்டியது. இதனால், சுமார் 50 ஆயிரம் சிறு, குறு தேயிலை விவசாயிகள் பலனடைந்தார்கள். மேலும் , இடைத்தரகர்கள் தொந்தரவின்றி, தேயிலை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் நேரடியாக தேயிலையை வாங்குவதற்கும், விற்பதற்கும் டி.சர்வ் என்ற ஆன்லைன் விற்பனையை முதல்வர் ஜெயலலிதா 2003 - ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தார். 2011 - ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் சிறு, குறு தேயிலை விவசாயிகளுக்கு, விலை வீழ்ச்சி ஏற்படும்போதெல்லாம், கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் கூடுதல் விலையாக வழங்குவதற்கு உத்தரவிட்டார். இந்த திட்டம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு, குறு தேயிலை விவசாயிகளின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகித்தது.
இந்நிலையில் செலவு பல மடங்கு அதிகரித்த நிலையில், தற்போது 1 கிலோ பசுந்தேயிலையின் விலை 12 ரூபாய் வரை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுமார் 85 ஆயிரம் சிறு, குறு தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், பசுந்தேயிலைக்கான உண்மையான உற்பத்தி செலவு குறித்த தோட்டக் கலைத் துறையின் பரிந்துரைகள் மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் விவசாய விளைபொருட்களுக்கான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி, பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்கவேண்டும். அதாவது 1 கிலோ பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக 33.50 ரூபாயை நிர்ணயம் செய்திட மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். மேலும் ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு 10 ரூபாய் மானியமாக வழங்கிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.