மிஜோரத்தில் 78% சத்தீஸ்கரில் 72% வாக்குப்பதிவு!

வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு

மிஜோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒரே கட்ட தேர்தலில் 78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேநேரத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் 20 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 71.93 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அதிகாரபூர்வ வாக்குபதிவை தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவிக்கலாம் எனத் தெரிகிறது.

2018 ஆம் ஆண்டு தேர்தலில் மிஜோரத்தில் 80 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அதே தேர்தலில் சத்தீஸ்கர் மாவட்டத்தில் 18 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 76.42 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

சத்தீஸ்கரில் அதிகபட்சமாக சுயிகாதன்கான்தயி தொகுதியில் 76.31 சதவீத வாக்குகளும் குறைந்த அளவாக பிஜாப்பூரில் 40.98 வாக்குகளும் பதிவாகியுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

தேர்தல் ஆணையம் திட்டமிட்டு செயல்பட்டதன் காரணமாகவும், விரிவான கண்காணிப்பு காரணமாகவும் மிஜோரம், சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களிலும் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதாக தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்டத் தேர்தலுக்காக 5,304 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 126 கிராமங்களில் புதிதாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் பஸ்தார் பகுதியைச் சேர்ந்த மக்கள் மலைப் பகுதிகளில் நீண்டதூரம் பயணம் செய்து நக்சல்கள் அச்சுறுத்தலுக்கு இடையே 22வாக்களிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் எளிதாக வாக்களித்தனர்.

மிஜோரம் மாநிலத்தில் செர்சிப் தொகுதியில் அதிகபட்சமாக 84.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அடுத்து மமித் தொகுதியில் 84.23, ஹனாதியாலில் 84.16, கோலாசிப் தொகுதியில் 82.77, காவாஜ்வால் தொகுதியில் 82.39 சதவீத வாக்குகளும் பதிவாகின. சத்தீஸ்கர்

மாநிலத்தில் கன்கர் தொகுதியில் முதல் முயற்சியாக மூன்றாம் பாலினத்தவர்களுக்காக பகஞ்சூர் பகுதியில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. 80 வயதானவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கும் வசதியும் செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் வயதானவர்கள் பலரும் வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வரிசையில் நின்று  வாக்களித்தனர்.

மிஜோரத்தில் 8,52,088 வாக்காளர்களும் சத்தீஸ்கர் முதல் கட்ட தேர்தலில் 40,78,860 வாக்காளர்களும் வாக்குகளைப் பதிவு செய்தனர். மிஜோரத்தில் மொத்தம் 1,276 வாக்குச்சாவடிகல் அமைக்கப்பட்டிருந்தன. மிஜோரத்தில் 174 வேட்பாளர்களும் சத்தீஸ்கரில் 20 தொகுதிகளுக்கு 223 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

சத்தீஸ்கரில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு மூலம் முன்னாள் முதல்வர் ரமன் சிங் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் பாவ்னா போரா, லதா உசென்டி, கெளதம் உய்கி உள்ளிட்டோர் தலைவிதி நிர்ணயிக்கப்பட்டுவிடும். காங்கிரஸ் கட்சி சார்பில் முகமது அக்பர், சாவித்ரி மனோஜ் மண்டாவி, மோகன் மார்கம், விக்ரம் மண்டாவி மற்றும் கவாஸி லக்மா ஆகியோர் களத்தில் குதித்துள்ளனர்.

மிஜோரம் முதல்வரும் மிஜோ தேசிய முன்னணியின் தலைவருமான ஜோரம்தங்கா அய்ஸ்வால் கிழக்கு-1 தொகுதியில் போட்டியிடுகிறார். ஜோரம் மக்கள் இயக்கம் தலைவர் லால்துஹோமா செர்சிப் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 2018 தேர்தலில் மிஜோ தேசிய முன்னணி மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 26 தொகுதிகளை கைப்பற்றியது.

மிஜோரத்தில் மிஜோ தேசிய முன்னணி, காங்கிரஸ் மற்றும் ஜோரம் மக்கள் இயக்கம் ஆகிய மூன்றும் 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. பா.ஜ.க. 23 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் மீதமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வருகிற 17 ஆம் தேதி தேர்தல் நடைபெறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com