முஸ்லிம்கள் உங்கள் அடிமையல்ல: காங்கிரஸ் தலைவர் குரேஷி அதிரடி

 அஜிஸ் குரேஷி
அஜிஸ் குரேஷி

முஸ்லிம்கள் உங்கள் அடிமைகள் அல்ல என்று மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அஜிஸ் குரேஷி எச்சரித்துள்ளார். காங்கிரஸ் கட்சி வாக்குவங்கிக்காக  ஹிந்துத்துவா அரசியலை கையிலெடுத்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

82 வயதான குரேஷி உத்தரப்பிரதேச ஆளுநராகவும், மத்தியப் பிரதேச அமைச்சராகவும், மக்களவை எம்.பி.யாகவும் இருந்தவர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு விதிஷாவில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முஸ்லிம்களிடையே அவர் பேசினார். அப்போது அவர், “முஸ்லிம்கள் உங்கள் கட்டளைப்படி செயல்படும் அடிமைகள் அல்ல” என்று காங்கிரஸ் கட்சியையே சாடினார்.

காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல்கட்சிகளும் முஸ்லிம்களை கொத்தடிமைகள் போல கருதுகிறார்கள். அவர்கள் இடும் கட்டளையை ஏற்று செயல்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு போலீஸ், பாதுகாப்பு மற்றும் வங்கிகளில் வேலை கிடைக்காத நிலையில் உங்களுக்கு ஏன் வோட்டு போடவேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

முஸ்லிம்களின் கடைகள், வழிபாட்டு தலங்கள், வீடுகள் அடித்து நொறுக்கப்படுகின்றன அல்லது தீக்கிரையாக்கப்படுகின்றன. அவர்கள் ஒன்றும் கோழையல்ல. எதற்கு ஒரு எல்லை உண்டு. எல்லை மீறினால் நாட்டில் உள்ள 22 கோடி முஸ்லிம்களில் 2 கோடி முஸ்லிம்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்ய தயாராக இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

காங்கிரஸ் தலைவர்கள் இப்போது ஹிந்துத்துவா கோஷம்போட தொடங்கியிருக்கிறார்கள். அவர் இப்போது ஜெய் கங்கா மைய்யா, ஜெய் நர்மதா மைய்யா, கர்வா சே கஹோ ஹிந்து ஹைன் என்று கோஷம் போடுகின்றனர். மேலும் மத்தியப் பிரதேச காங்கிரஸ் அலுவலகத்தில் சிலையையும் நிறுவியுள்ளனர். எனது பேச்சுக்காக என்னை கட்சியிலிருந்து வெளியேற்றினாலும் நான் கவலைப்பட மாட்டேன் என்றார் அவர்.

எனினும் மாநில காங்கிரஸ், குரேஷியின் கருத்தை மறுத்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கே.கே.மிஸ்ரா கூறுகையில், குரேஷி கூறியுள்ளது அவரது சொந்த கருத்தாகும். காங்கிரஸ் கட்சி மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்டுள்ளதே தவிர குரேஷி சொல்வது போல் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

எனினும் மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க.வினர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு காங்கிரஸ் கட்சி மீது தாக்குதல் தொடுத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினரை திருப்தி படுத்தும் அரசியலைத்தான் செய்து வருகின்றனர். ராகுல்காந்தியும், கமல்நாத்தும் தேர்தல் நேரத்தில்தான் ஹிந்துக்களை பற்றி பேசுகின்றனர். குரேஷியன் குற்றச்சாட்டுக்கு பதில் என்ன என்பதை ராகுல் காந்தியும், கமல்நாத்தும் தெளிவுபடுத்த வேண்டும் என்று பா.ஜ.க. மாநில செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலுஜா வலியுறுத்தினார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய பிரதேச காங்கிரஸ் மென்மையான ஹிந்துத்துவா கொள்கையை கடைபிடிப்பதையே குரேஷியன் பேச்சு காட்டுகிறது. ஹிந்துக்களின் வாக்குகளை இழந்துவிடக்கூடாது, அது பா.ஜ.க. பக்கம் சென்றுவிடக் கூடாது என்றே காங்கிரஸ் செயல்படுவதாகத் தெரிகிறது.

மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சமீபகாலமாக அவர், ஹிந்துமத தலைவர்களை சந்தித்து வருகிறார். இந்தியா ஹிந்து ராஷ்டிரம், இங்கு வாழும் மக்களில் 82 சதவீதம் ஹிந்துக்கள். இது சொல்லித்தான் தெரியவேண்டுமா? என்கிறார் கமல்நாத்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com