துணைநிலை ஆளுநர் பதவி: வதந்திகளை நம்பவேண்டாம் என்கிறார் குலாம்நபி ஆஸாத்

குலாம் நபி ஆஸாத்
குலாம் நபி ஆஸாத்

ம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் பதவியா? இது தொடர்பாக வரும் செய்திகளை நம்ப வேண்டாம். அவை வதந்திகளே என்கிறார் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆஸாத்.

துணைநிலை ஆளுநர் பதவி மீது எல்லாம் எனக்கு ஆசையில்லை. ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு சேவை செய்யவே நான் விரும்புகிறேன் என்றார் ஆஸாத்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அடுத்த துணைநிலை ஆளுநராக நான் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவை வதந்திதான். மக்கள் இதை நம்பவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பதவி தேடி நான் இங்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே விரும்புகிறேன் என்று தாம் தொடங்கிய ஜனநாயக முற்போக்கு ஆஸாத் கட்சியின் நிறுவன நாளில் பேசுகையில் குலாம்நபி ஆஸாத் கூறினார். (காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய பின் ஆஸாத் தொடங்கிய அரசியல் கட்சி இதுவாகும்.)

2005 ஆம் ஆண்டில் நான் இங்கு வந்தபோது (முதல்வராக) மத்திய அமைச்சர் பதவியை உதறிவிட்டுத்தான் இங்குவந்தேன். அதாவது மக்களுக்கு சேவை செய்யவே வந்தேன். இப்போது மீண்டும் இங்கு வந்துள்ளதை சிலர் குறைகூறி விமர்சித்து வருகின்றனர். பா.ஜ.க.வின் முன்னேற்பாட்டின் பேரில்தான் நான் அரசியல் மறுவாழ்வுக்காக இங்கு வந்துள்ளதாக பலரும் கூறிவருகின்றனர். நான் பதவிக்காக இங்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளேன்.

ஜம்மு காஷ்மீரில் வேலையின்மையும், பணவீக்கமும் முக்கியப் பிரச்னையாக உள்ளது. சுற்றுலாவுக்கு வாய்ப்புள்ள இந்த பகுதியில் அதை வளர்ப்பதன் மூலம் அதிக வேலைவாய்ப்பை பெறமுடியும்.பணவீக்கம் அதிகரித்து வந்தாலும் அது இந்தியாவுக்கு மட்டும் உள்ள பிரச்னை அல்ல. ஐரோப்பாவில் பணவீக்கம் இதைவிட வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால், அதை சமாளிக்க அவர்களுக்கு வழி இருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் ஏழ்மை மிகுந்த மாநிலமாகும். இங்கு வேலையின்மை அதிகரித்து வருகிறது. அரசு வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரங்களை வெளியிட்டு வருகின்ற போதிலும் நேர்காணல் நடைபெறுவதில்லை. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் படிப்புக்காக சேமிப்புகளை செலவழித்துவிட்டனர். இளைஞர்கள் பெரும்பாலானவர்கள் வேலையின்றி இருக்கிறார்கள்.

சுற்றுலாவை மேம்படுத்தினால் பலருக்கும் வேலை கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க முடியும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அதிகாரங்கள், அந்தஸ்தை 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு ரத்துச் செய்தது மிகப்பெரிய தவறாகும்.கடந்த சில ஆண்டுகளில் அரசியல் ரீதியில் எடுக்கப்பட்ட முடிவுகளால் மாநிலம் பின்தங்கிய நிலைக்குச் சென்றுவிட்டது என்றார்.

போதை மருந்து கடத்தல் கும்பலில் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். போதை மருந்து கடத்தலில் தொடர்புடைய பல புள்ளிகள் கோடீஸ்வரர் ஆகிவிட்டனர். அவர்களை கைது செய்து தூக்கில்போட வேண்டும் என்றார் ஆஸாத்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com