அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, பகைவர்களும் இல்லை: அஜித்பவார்!

அஜித்பவார்
அஜித்பவார்

க்கள் பிரச்னைகளுக்கு தீர்வுகாணவே ஆளும் சிவசேனை-பாஜக. கூட்டணியில் சேர்ந்ததாக மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித்பவார் தெரிவித்தார். அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர பகைவர்களும் இல்லை என்றும் அவர் கூறினார். மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே ஆளும் கட்சி கூட்டணியில் சேர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மகாராஷ்டிர மாநிலம் பீட் என்னுமிடத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பேசிய அஜித்பவார் அனைத்து வகுப்பைச் சேர்ந்த மக்களையும் காப்பது எங்களது கடமை என்று கூறினார். இந்த தொகுதி மாநில வேளாண்துறை அமைச்சரும், அஜித் ஆதரவாளரான தனஞ்செய் முண்டேயின் தொகுதியாகும். இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அந்த இடத்தில் நடைபெற்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தார்.

கடந்த ஜூலை 2 ஆம் தேதிதான் அதிரடி நடவடிக்கையாக தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அஜித் பவார், தமது ஆதரவாளர்களுடன் ஆளுங்கட்சி கூட்டணியில் சேர்ந்து துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.எதிர்க்கட்சிகளை கடுமையாக தாக்கிப் பேசிய அஜித் பவார், எதிர்க்கட்சியினர் தவறான தகவல்களையே மக்களுக்கு தருவதாக குற்றஞ்சாட்டினார்.

நாங்கள் விவசாயிகளின் நலனுக்காகவே செயல்பட்டு வருகிறோம். தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாது. நான் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தபோது பல நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளேன்.

மாநிலத்தில் வெங்காயம் தொடர்பான பிரச்னை எழுந்ததும் பலரும் குரல் எழுப்பினர். எதிர்க்கட்சியினர் தவறான தகவல்களைக் கொடுத்தனர். நான், வேளாண் அமைச்சர் தன்ஞ்செய் முண்டேவை தில்லிக்கு அனுப்பி மத்திய அரசிடம் உதவி கேட்டிருந்தேன். உள்துறை அமைச்சர் அமித்ஷா, உடனடியாக 2 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை கிலோ ரூ.24 விலையில் கொள்முதல் செய்தார் என்றார்.

முன்னதாக மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் வெங்காயத்துக்கு 40 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கும் முடிவால் விவசாயிகளை பாதிக்கப்படுவார்கள் என்றார். ஏற்றுமதி வரி விதிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை சம்மேளனம் வெங்காயத்தை கொள்முதல் செய்யாவிடில் அவை அழுகி வீணாகிவிடும். இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் என்று தெரிவித்தார்.

பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கு எதிரான அரசு. நாட்டிலுள்ள விவசாயிகள் மற்றும் மக்கள் குறித்து அவர்களுக்கு கவலை இல்லை என்றும் கூறியிருந்தார். சமீபத்தில் மத்திய அரசு வெங்காயத்துக்கு 40 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்படும் என்று கூறியிருந்தது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

செப்டம்பர் மாதத்தில் வெங்காயம் விலை அதிகரிக்கலாம் என்பதால் ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டதாகத்தெரிகிறது முன்னதாக ஆகஸ்ட் 11 ஆம் தேதி மத்திய அரசு, கையிருப்பிலிருந்து வெங்காயத்தில் வெளிமார்க்கெட் விற்பனைக்கு விடுவித்தது.

முன்னதாக நடப்பு ஆண்டு (2023-2024) 3 லட்சம் டன் வெங்காயத்தை இருப்பில் வைக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. கடந்த ஆண்டு 2.51 லட்ம் மெட்ரிக் டன் வெங்காயம் இருப்பில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com