பா.ஜ.க. ஆதரவு நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் நிகழ்ச்சிகளை புறக்கணிப்பது என்ற இந்தியா கூட்டணியின் முடிவுக்கு ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித் தலைவர்களில் ஒருவரும், பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த முடிவு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தில்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் பாட்னா திரும்பிய தேஜஸ்வி யாதவ், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பா.ஜ.க. ஆதரவாளர்கள் நடத்தும் நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை என்ற முடிவு கூட்டணியின் துணைக் குழுவால் எடுக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் செயல்பாடு, மத்தியில் ஆளுங்கட்சிக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது போல் சில ஊடகவியலாளர்களிடம் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் கல்வி அமைச்சர் சந்திரசேர ராவின் சர்ச்சைக்குரிய கருத்து பற்றி தெரிவித்த தேஜஸ்வி யாதவ், அமைச்சர் சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பேசுவதை தவிர்த்து அவர் தனது துறைமீது கவனம் செலுத்த வேண்டும். ஊடகங்கள் தேவையில்லாமல் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவே நான் கருதுகிறேன்.
மத்திய உள்துறை அமைச்சர் பிகார் வருவதால், அவருடைய வருகை பா.ஜ.க.வுக்கு வேண்டுமானால் ஆதாயமாக இருக்கலாம். அதனால் பிகாருக்கு எந்த நன்மையும் இல்லை. அவர் அங்கம் வகிக்கும் மத்திய அரசு, பிகார் மாநிலத்துக்கு சிறப்பு நிதியைத் தரத் தவறிவிட்டது.
பிகார் மாநிலத்துக்கு அடிக்கடி வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா, வன்முறைச் சம்பவங்களால் சிக்கித் தவிக்கும் மணிப்பூர் மாநிலத்துக்கு ஒரு முறையாவது சென்று பார்க்கவேண்டும்.
ஜி-20 விருந்தில் கலந்துகொண்ட பிகார் முதல்வர் நிதிஷ்குமாரை பிரதமர் வரவேற்றது குறித்து பலரும் பேசுகின்றனர். அடுத்த பெரிய திட்டத்துக்கு நிதிஷ்குமார் தயாராகிறார் என்று ஊடகங்கள் ஊகங்கள் வெளியிடுகின்றன. அப்படி ஏதும் நடக்க வாய்ப்பில்லை. அதை கற்பனை செய்து பார்ப்பதால் தங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்று பா.ஜ.க.வினர் நினைத்தால் அப்படியே அவர்கள் செய்யட்டும். இதன் மூலமாவது அவர்களின் வெறுப்புப் பிரசாரம் சிறிது ஓயட்டும் என்றார் தேஜஸ்வி யாதவ்.