ஒரே நாடு, ஒரே தேர்தல்: குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு

ஒரே நாடு, ஒரே தேர்தல்: குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு

’ஒரே நாடு ஒரே தேர்தல்’ விவகாரத்தை ஆய்வு செய்வதற்காக குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள் பற்றிய   விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

வரவிருக்கும் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதனையொட்டியே அந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதியுடன் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை, ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமலுக்கு வந்தால் அனைத்து மாநிலங்களுக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறும். வாக்குப்பதிவும் ஒரே நேரத்தில் நடைபெறும்.

கடந்த 9 ஆண்டுகளில் இதுபோன்று சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறுவது இதுவே முதன் முறையாகும். முன்னதாக, கடந்த 2017 ஜூன் 30-ல் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டம் கூட்டப்பட்டு ஜிஎஸ்டி சட்டம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டுவர முதல் காரணமாக செலவினங்களை குறைப்பது என்று சொல்லப்படுகிறது.  2019 மக்களவைத் தேர்தலில் ரூ. 60 ஆயிரம் கோடி செலவழிக்கப்பட்டது. இது அரசியல் கட்சிகள் தேர்தல் செலவினங்களையும் உள்ளடக்கியதாகும். இந்நிலையில் ஒரே நேரத்தில் மக்களவை, மாநில சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தினால் செலவுகள் குறையும் என்று இதனை ஆதரிக்கும் தரப்புகள் தெரிவிக்கின்றன.

ஆனால், ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும்,  சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடத்தினால் தங்களால் செலவுகள் அடிப்படையில் தேசிய கட்சியை எதிர்கொள்ள முடியாது என்பதே பிராந்திய கட்சிகளின் முக்கிய வாதமாக இருக்கின்றது. அதுமட்டுமன்றி அவ்வாறு ஒரே தேர்தல் நடத்தும்போது உள்ளூர் பிரச்சினைகள் கவனம் பெறாமல் போய்விடும் என்றும் பிராந்தியக் கட்சிகள் கவலை தெரிவிக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com