இந்தியா நிலவை அடையும்போது பாகிஸ்தான் உலக நாடுகளிடம் பிச்சை எடுக்கிறது:நவாஸ் ஷெரீப்

நவாஸ் ஷெரீப்
நவாஸ் ஷெரீப்

ந்தியா நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி சாதனை படைக்கிறது. ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் உலகநாடுகளிடம் பிச்சை எடுக்கிறது என்றார் வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடிகளுக்கு ராணுவத்தின் முன்னாள் ஜெனரல்களும், நீதிபதிகளும்தான் காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

பாகிஸ்தானின் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது. பணவீக்கம் அதிகரித்து மக்கள் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். இன்று இந்தியா நிலவுக்கு விண்கலத்தை அனுப்புகிறது. ஜி-20 உச்ச மாநாட்டை நடத்தி முடித்துள்ளது. ஆனால், பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் ஒவ்வொரு நாடாகச் சென்று நிதி கேட்டு பிச்சை எடுக்கிறார் என்றும் நவாஸ் ஷெரீப் குற்றஞ்சாட்டினார்.

லண்டனிலிருந்து காணொளி காட்சி (விடியோ கான்பிரன்சிங்) மூலம் கட்சித் தொண்டர்களிடையே நவாஸ் ஷெரீப் பேசினார். அப்போது அவர் மேலும் கூறியதாவது:

அடல் பிகாரி வாஜ்பேயி இந்தியாவின் பிரதமராக இருந்தபோது, இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு ஒரு பில்லியன் டாலராக இருந்தது. ஆனால், இப்போது இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு 600 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்தியா உயர்ந்த நிலையை அடைந்துள்ள நிலையில் பாகிஸ்தான் நிதி கேட்டு உலக நாடுகளிடம் பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜூலையில் பொருளாதார வீழ்ச்சியால் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானை சரிவிலிருந்து மீட்டெடுக்க சர்வதேச செலாவணி நிதியம் (ஐ.எம்.எப்.) இந்தியாவுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்க முன்வந்து முதல் கட்டமாக 1.2 பில்லியன் டாலரை வழங்கியுள்ளது.

எதிர்வரும் தேர்தலில் கட்சியின் அரசியல்            பிரசாரத்திற்கு தலைமை தாங்குவதற்காக அக்டோபர் 21 ஆம் தேதி நாடு திரும்ப இருப்பதாகவும் நவாஸ், ஷெரீப் அறிவித்துள்ளார். அவர் கடந்த நான்கு ஆண்டுகாலமாக லண்டனில் தஞ்சமடைந்திருந்தார். அதற்கு முடிவு கட்டும் வகையில் பாகிஸ்தான் திரும்ப உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 நவம்பர் மாதம் ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற நவாஸ் ஷெரீப், அப்போதைய ராணுவ தளபதி ஜெனரல் பஜ்வா உதவியுடன் மருத்துவக் காரணங்களுக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டார். அவர் அடுத்த மாதம் லாகூர் வருவதற்கு முன்னதாக அவருக்கு பாதுகாப்பு ஜாமீன் கிடைக்கும் என்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் ஷெரீப் கட்சி கூறுகிறது. நாடு திரும்பும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு தாம் ஆட்சியிலிருந்து அகற்றப்படுவதற்கு அப்போது ராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் ஜாவித் பஜ்வா மற்றும் அப்போது ஐ.எஸ்.ஐ. தலைவராக இருந்த ஃபைஸ் ஹமீத் ஆகிய இருவருமே காரணம் என்று நவாஸ் ஷெரீப் குற்றஞ்சாட்டினார்.

அப்போது அவர்களுக்கு துணையாக செயல்பட்டது மூன்னாள் தலைமை நீதிபதிகள் சாகிப் நிஸார் மற்றும் ஆஸிப் சய்யீத் கோஸை இருவர்கள்தான். அவர்கள் செய்த குற்றம் கொலைக் குற்றத்தைவிட கொடியதாகும். அவர்களுக்கு மன்னிப்பே கூடாது. நடந்த செயலுக்கு அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஷெரீப் கூறினார்.

அடுத்து வரும் பொதுத் தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் –ஷெரீப் கட்சி வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றார் அவர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com