
பழனி பஞ்சாமிர்தத்தினுடைய விலை ஐந்து ரூபாய் தற்போது உயர்த்தப்பட்டிருக்கிறது.
பழனி முருகன் கோயில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரசித்தி பெற்ற கோயில். இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். மேலும் இந்த கோயிலின் சிறப்பாக வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானத்தின் சார்பில் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்படுகிறது. பழனி பஞ்சாமிர்தம் என்றால் தனி சிறப்பை கொண்டது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தத்தை வாங்காமல் திரும்பி செல்வது கிடையாது.
பழனி முருகன் கோவில் தேவஸ்தானத்தின் சார்பில் அரைக் கிலோ பஞ்சாமிர்த டப்பா 35 ரூபாய்க்கும், டின் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது நெய் விலை மற்றும் மூலப் பொருட்கள் விலை உயர்வு காரணமாக எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி 5 ரூபாய் விற்கப்படுகிறது. இதனால் அரைக் கிலோ தற்போது 35 ரூபாய்க்கும், டின் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக மலைக்கோயில் மற்றும் கிரி வீதிகளில் பத்துக்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த கோயிலில் சாதாரண நாட்களில் 20 ஆயிரம் டப்பா பஞ்சாமிர்தமும் பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ஒன்றரை லட்சம் வரை பஞ்சாமிர்த டப்பாவும் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் திடீர் விலை உயர்வு பக்தர்களுக்கு மேலும் பொருட்செலவை அதிகப்படுத்தும் சுமையாக மாறி இருக்கிறது. இதனால் பஞ்சாமிர்தத்தினுடைய விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அரசுக்கும், தேவஸ்தானத்திற்கும் கோரிக்கை விடுக்கின்றனர்.