நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்: இந்தியா கூட்டணி தலைவர்கள் நாளை ஆலோசனை

INDIA Parties meeting
INDIA Parties meeting

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் வருகிற 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சி கூட்டணியைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை தில்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் கூடி விவாதிக்க உள்ளனர்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை எதிர்கொள்வதற்கான உத்திகள் குறித்து விவாதிக்க மல்லிகார்ஜுன கார்கே இந்த கூட்டத்தை கூட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள விஷயங்கள் குறித்து மத்திய அரசு தெளிவாக எதையும் குறிப்பிடவில்லை என்றாலும் மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும், உள்ளாட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்  நடத்துவது குறித்து விவாதிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தியா என்பது பல மாநிலங்கள் சேர்ந்த ஒன்றாகும். இந்த நேரத்தில் ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பது இந்தியாவிலுள்ள மாநிலங்கள் மீதான தாக்குதலாகும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் (டுவிட்டர் தளத்தில்) கூறியுள்ளார்.

இது ஜனநாயக நாடான இந்தியாவை, சர்வாதிகாரத்துக்கு அழைத்துச் செல்ல நரேந்திர மோடி அரசு விரும்புவதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார். ஒரே தேசம், ஒரே தேர்தல் திட்டத்துக்காக குழு அமைத்துள்ளதாக மத்திய அரசு கூறுவது ஏமாற்றுவேலையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். கூட்டாட்சி தத்துவத்தை மத்திய அரசு குழிதோண்டி புதைக்க முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மக்கள் பிரிதிநிதித்துவ சட்டம் 1951 இல் திருத்தங்கள் கொண்டு வருவதுடன் அரசியலமைப்புச் சட்டத்தில் ஐந்து வகையான திருத்தங்கள் கொண்டுவர வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டை பிளவுபடுத்தி, நாட்டு மக்களை திசைத்திருப்பும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. அதன் முயற்சி ஒருபோதும் பலிக்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com